உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

கும் வேளையில், இதயமற்ற கயவர் சிலர் அந்தத் திருவிளக்கை அணைத்து விட்டனரே......

தூத்துக்குடி சாமி—என்றால் தமிழகம், கேட்ட விநாடியிலேயே ஓர் களிப்பு காட்டுமே—பல ஆண்டுகளாக அந்தக் கொள்கை வீரனின் தொண்டு தழைத்து, மணம் தந்து வருவது கண்டு, மகிழ்ந்து இறுமாந்தல்லவா இருந்து வந்திருக்கிறது. தூத்துக்குடி கே. வி. கே. சாமி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டதும் எந்த மன்றத்திலும், மாநாட்டிலும், உள்ள மக்கள், நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களுக்கு ஓர் விருந்து, இதயத்துக்கு ஓர் நம்பிக்கை, நாடு விடுதலை பெற்றுத் தீரும் என்பதற்கோர் அத்தாட்சி இதோ, இதோ, என்று சுட்டிக்காட்டி அல்லவா இன்புறுவர். தத்துவ விளக்கமா செய்வார்? தர்க்கமா பேசுவார்? தழதழத்த குரலா? தட்டுத் தடுமாறும் போக்கா? ஒரு துளியும் கிடையாதே! கழகம் இன்ன திட்டம் தீட்டுகிறது, நான் அந்தக் கட்டளையை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன், கடமையை, எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் நிறைவேற்றியே தீருவேன், இது உறுதி என்றல்லவா, தொண்டு உள்ளத்துடன், வீர உள்ளத்துடன் எடுத்துக் கூறுவார். ஆம்! இந்த மாவீரன், செய்து முடிப்பான்! அதற்கான ஆற்றல் இவனிடம் இருக்கிறது! — என்று எவரும் கூறுவரே! அத்தகைய மாவீரனை, தம்பி, இழந்தோமே — நாம் வாழ்கிறோம், வேதனையால் வாட்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம், வன்கணாளர்கள் நமது குலக்கொடியை வேரோடு பறித்தெடுத்து அழித்துவிட்டனரே!

தம்பி, நான் உங்கள் யாவரிடத்திலும், உரிமையுடன் பேசுவேன். சாமியிடம் நான் சொந்தத்துடன் பேசுவேன்—என்னை நன்றாகப் பார்த்தபடியே அவர் இருக்கமாட்டார்—நான் பேசும் போது, அவர் அப்படியா? என்று கேட்டதில்லை, ஆகுமா! என்று கேட்பதில்லை, ஆகட்டும் என்பதன்றி பிறிதோர் சொல்லை அவர் எனக்கு அளித்ததில்லையே! அவரிடம் நான். பழகிய ஆண்டுகள் பலப்பல, சுயமரியாதை இயக்கால முதற்கொண்டு, அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றிருந்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த வாய்ப்பு, எனக்கு, நாம் எடுத்துக்கொண்டுள்ள இலட்சியத்தில் வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கான நம்பிக்கையை மிகுதியாக்கிற்று. செயல்படு திட்டம் எது என் எண்ணத்தில் எழும்போது அடுத்த விநாடி சாமியின் பெயர் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட தம்பி, அந்த ஆற்றல் வீரன், அவனுக்கா இந்தக் கொடுமை!! அந்த மறத்தமிழ் வீரனுக்கா இந்தக் கொடுமை!