பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்-30


                            இறைச்சிப் பொருள்

இன்பமே நுதலி வருகின்ற அகப் பொருட் பனுவல்கள் பெரிதும் குறிப்புப்பொருள் மிக்கனவாகவே இருத்தல் வேண்டும் என்பது பண்டையோர் கொண்ட கொள்கையாகும். காதல் வாழ்க்கையே குறிப்பினால் ஆக்கப்பெறும் இயல்புடையது என்பதை நாம் அறிவோம். காதலர் ஒருவரோடொருவர் சொல்லாடுங்கால் அம்மொழிகள் தமது வெளிப்படைப் பொருளால் அவ் விருவரும் பகையுடையோர் போன்று காட்டிநிற்க, அவற்றினின்றும் குறிப்பாகப் புலனாகும் பொருளோ அவர்தம் ஆழ்ந்த காதலை உணர்த்துவனவாக இருக்கும். இவ்வாறு பயின்றுவரும் மொழிகள் உரைநடையில் அமையினும் அவை பயில்வோர்க்குப் பேரின்பம் தருவனவாக இருக்கும் ஆயின், இவை உணருந்தோறும் இன்பம் நல்கும் கவிதை மொழியில் அமைந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை; வானமிழ்தம் உண்டலால் பெறும் இன்பத்தினும் நனி சிறந்து திகழும். இக்குறிப்புப் பொருளை அகப்பொருள் நூல்களில் நிரம்பப் பொதியும் பொருட்டே அவற்றிற்கெனச் சிறப்பாகச் சில விதிகளையும் வகுத்தனர் நம் பண்டைத் தமிழ்ச்சான்றோர். இவை உள்ளுறை உவமும் இறைச்சிப் பொருளுமாகும். கவிதை இன்பம் துய்ப்பார்க்கு உள்ளுறை உவமம் சிறந்த விருந்தாக இருக்கும் என்பதையும் அவை சங்க அகப்பாடல்களில் அதிகமாகப் பயின்று வரும் என்பதனையும் முன் இயலில் விளக்கினோம்.

       உள்ளுறை உவமத்தை விட நுட்பமாக உணர்த்தப்பெறுவது இறைச்சிப் பொருள்; இதுவும் சங்க அகப்பாடல்களில் பயின்று வருகின்றது. இறைச்சி என்பது என்ன? கவிஞர்கள் தாம் கூறும் சொற்கட்கு அடைமொழியாகக் கூறப்பெறும் சொற்கள் வறிய அடைமொழி மாத்திரையாகவே நில்லாமல், தமது ஆற்றலாலேயே பிறிதொரு பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்துமாறு சொல்