பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 அகத்திணைக் கொள்கைகள்


வியந்து போற்றுகின்றான் தலைவன். கூந்தலிற் பெய்த மலர் தானே உதிர வில்லை; வேண்டுமென்றே உதிர்க்கின்றாள். அன்போடு காதலன் சூடிய மலரை அச்சத்துடன் நினைந்து உதிர்த்தாள் எனின் குமரியர் மலரணிதல் சமுதாய வழக்கிற்கு ஒவ்வாதென்பது தெளிவாகின்றதன்றோ?

    முல்லைக் குமரி ஒருத்தி கொண்ட கவலை இக்கருத்தினை மேலும் அரண் செய்கின்றது.

பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலார்

கைபுனை கண்ணி முடித்தாளென்று யாங்கேட்பின்

செய்வதி லாகுமோ மற்று.”22

   [போது-பூ, கூழை-குமரியின் கூந்தல்; கைபுனை-கையால் புனைந்த கண்ணி-தலைமாலை; யாய்-தாய்; செய்வது-வெகுளாமற் செய்வது.)
   

என்ற பாடற்பகுதி இவள் கவலையை உணர்த்துகின்றது. கவலைக்குக் காரணம்தான் என்ன? முல்லை நிலப் பகுதியில் ஆயர்கள் ஏறுகோள் விழா நடத்தினர். ஆயர்பாடிக் குமரிய ரெல்லாரும் அதனைக்கண்டு களிக்கக்குழுமியிருந்தனர். செவியிலே மறையையுடையகாளையை ஆயஇளைஞன் ஒருவன் மடக்கினான்; அடக்கினான். அந்தக் காளை அந்த இளைஞன் தலையிற் சூடியிருந்த முல்லைச் சரத்தைத் தன் கொம்பினால் பற்றிக் கொண்டு சுழற்றியது. கொம்பு சுழன்ற வேகத்தில் ஒரு முல்லைப் பூ தனித்துப் பறந்து சென்று எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஓர்ஆய் மகளின் கூழைக் கற்றையுள்'29 போய் விழுந்தது. இழந்த பொருள் எதிர்பாராது கிடைப்பின் ஆவலுடனும் ஆசையுடனும் அதனைப் பற்றிப் போற்றிக் கொள்வது போல, தானாக வந்து கூந்தலில் வீழ்ந்த பூவைக் கீழே நழுவி விழாமல் அந்த ஆய் மகள் தலையில் முடித்துக்கொண்டனள். இது தன் தாயின் காதிற்கு எட்டியிருத்தல் கூடும் என்று அஞ்சுகின்றாள்; அயலான் கை தொட்டுத் தலையில் வைத்த கண்ணிப் பூவை விழைந்து முடித்துப் பொதிந்து கொண்டமைக்குத் தாய்


28. கவி-107 29. கூழை.இளங்குமரியின் கூந்தல். இது நீண்டு வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. இன்னும் வளர வேண்டும் என்ற குறையுடையது. கூழைக் கிளவியைக் குமரியர்கூந்தலுக்கு ஆட்சி செய்யும் இல்க்கிய வழக்கைக் காண்கிறோம். (குறுந்-113; நற்-140 அகம்-315:கலி-107)