பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தினை மாந்தர்

311


அக உலகில் தோழியைப் போன்ற ஒர் அற்புதப் படைப் பினைக் காண்டல் அரிது. இவளிடம் மட்டிலும் தான் தலைவி நன்கு நெருங்கிப் பழகுவாள் என்பது நன்கு எடுத்துக் காட்டப்பெற்றுள்ளது. இவளுடைய பெருமையை, தமிழ் நெஞ்சத்தைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். அகஉலகில் ஏனையோர் பெறும் பங்கும் ஒரளவு நன்றாகவே விளக்கம் பெறுகின்றது. பரத்தையரின் பங்கு, இவள் அகத்திணை யொழுக்கத்தில் பெற்றுள்ள இடம், இவள் படைப்பு பற்றிய கருத்து வேறுபாடுகள் ஆகியவை இப்பகுதியில் தெளிவு பெறுகின்றன.

தலைமக்களுடன் ஏதோ ஒருமுறையில் தொடர்புடையவர்கள் கண்டோர், அறிவர், பாணன், பார்ப்பார், விறலியர், கூத்தர், இளையோர், விருந்தினர், தேர்ப் பாகன் என்ற ஒன்பதின்மர். இவர்களுள்ளும் பாணன், தேர்ப்பாகன் இவர்தம் பங்கே அதிகமாகக் காட்டப் பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் இவர்கள் தொடர்புடையனவாகவுள்ள பாடல்களை ஏனையோர் தொடர்புடையனவாகவுள்ள பாடல்களைவிட எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்பெறுகின்றன என்பதுவே இதற்குக் காரணமாகும்.

மேற்குறிப்பிட்ட செய்திகள் இப்பகுதியில் மூன்று இயல்களில் விரிவாக விளக்கம் அடைகின்றன.