பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அணுவின் ஆக்கம்

வாற்றலைத் திறமையுடன் பெறும் முறைகளைப்பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இன்னும் ஒருசில ஆண்டுகளில் அம்முறைகள் நடைமுறைக்கு வருதலும் கூடும்.

அணுகுண்டு[1] : அணுகுண்டு என்பது ஒரு சிறிய கட்டமைப்பில் ஏராளமான அளவு ஆற்றலை அடக்கி வைத்திருந்து அவ்வாற்றலைப் பெருவேகத்தில் வெளிப்படுத்தும் ஓர் அற்புத சாதனம். அது பார்ப்பதற்கு வாமனன் போலிருப்பது; பயன்படுத்துங்கால் திருவிக்கிரமாவதாரம் எடுப்பது. அன்றியும், அது இதுகாறும் மனிதன் கண்டறிந்த இறுக்கமான ஆற்றல்களில் பல இலட்சம் மடங்கு ஆற்றலைத் திரட்டி வைத்திருக்கும் ஓர் அமைப்பு. அணுகுண்டிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அளவிற்கு அவன் பயன்படுத்திய, அல்லது பயன்படுத்துவதாக எண்ணிய எந்தச் சாதனங்களிலும் இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த ஆற்றலை உத்தேசமாக அளவிட்டுக் கூறினால், சில ஆயிரம் டன் நிலக்கரியில் அடங்கியிருக்கும் ஆற்றல் அதற்குச் சமமாகும். ஒரு பேரிடியில் அதனைவிட அதிக ஆற்றல் அடங்கியிருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால், கதிரவன் நாடோறும் அலைகடலிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் பல இலட்சக் கணக்கான டன் நீரை ஆவியாக்கி மேகமாகத் திரட்டுவதில் அளவிட முடியாத ஆற்றலைச் செலவிடுகிறான். ஆனால், இந்த அமைப்புக்களிலெல்லாம் ஆற்றல் மெல்லிதாகப் பரவியிருக்கின்றது ; மிக மெதுவாகவும் வெளிப்படுகிறது. ஆனால், அணுகுண்டில் சில இராத்தல்." அணுப்" பொருள்களில் குண்டின் ஆற்றல் முழுவதும் அடங்கித் தேங்கிக் கிடக்கின்றது; இவ்வாற்றல் ஒரு குறுகிய இடத்தில் ஒரு கணநேரத்தில் வெளிப்படுத்தப் பெறுகின்றது. ஓர் அணுகுண்டினை வெடிப்பதற்கு வேண்டப்படுவது இதுதான்; கணக்கிலடங்காத வேகத்தையும் எண்ணற்ற ஆற்றல் அளவினையுங்கொண்டு குண்டு வெடிக்கின்றது.

அமைதியில் ஆற்றல்: இவ்வாறு இறுகித் தேங்கிக் கிடக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதென்பது மிக அரிய


  1. அணுகுண்டு - atomic bomb.