பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அணுவின் ஆக்கம்


இழுக்கிறான். இந்த இரண்டு ஆற்றல்களுக்கும் இடையில் பூமி இருந்த இடத்திலேயே தன் வட்ட வழியை விட்டுப் பிறழ்ந்து போகாமல் சுழன்று வருகிறது. அங்ஙனமே, அணுவிலும் எதிர்மின்னி தன் வட்டத்தில் சுற்றி வருங்கால் புறமுக ஆற்றலால் வெளி நோக்கித் தள்ளப் பெறும்பொழுது அக முகக் கவர்ச்சி அதனை உள்ளுக்கு இழுப்பதால், அது சம நிலையில் நின்று தன் வட்டவழியே சுழன்று செல்லுகிறது. அதனால்தான், அது நேர் இயல் மின்னியில் போய் விழுவ தில்லை. அணுவின் நடுவிலிருக்கும் நேர் இயல் மின்னியைச் சூரியன் என்று வழங்குவதில்லை. அதனை அணுவின் உட்கரு என்று வழங்குவர். அதனைச் சுற்றிப் புறத்தே சுழலும் எதிர் மின்னிகளைக் கோள்நிலை எதிர் மின்னிகள்' என்று வழங்குவர். பூமியைச் சுற்றிச் சந்திரன் மட்டும்தான் சுழல்கிறான். அதுபோல, ஒரே நேர் இயல் மின்னியைச் சுற்றி ஒரே எதிர் மின்னிதான் சுழன்று வரும். நீரிய அணுவில் (படம்-2) இப்படித்தான் அமைந்திருக்கின்றது. நீரியத்தின் உட்கருவில் ஒரே ஒரு நேர் இயல் மின்னிதான் உண்டு. அதனைச் சுற்றி ஒரே ஒரு எதிர் மின்னிதான் இயங்கி வருகிறது. அனுவாற்றல் காரணமாகப் பெரிதும் நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துவரும் யுரேனியம் மிக அதிகமான அணு எடையைக்கொண்டது. ஆவர்த்தன அட்டவணையில், இயற்கையாகக் கிடைக்கும் அணுக்களில் இதுவே இறுதியில் உள்ளது. யுரேனியத்தைவிட அதிக எடையுள்ள தனிமங்களை இன்று மனிதர்கள் செயற்கை முறையில் படைத்துள்ளனர்; அவை யுரேனியத்தை அடுத்துத் தொடர்ந்து அமைகின்றன.


“உட்கரு - nucleus.” கோள்நிலை எதிர்மின்னிகள் - planetory electrons.