பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அமைப்பு

23


புளூட்டோ முதலிய கோள்கள் சுற்றிச் சுற்றி இயங்கி வருகின்றன. இந்தக் கதிரவன் குடும்பத்தைப் போன்றே அணுவும் அமைந்திருக்கின்றது. கதிரவன் மிகப் பெரியவன்; பூமியோ அதனைவிட எவ்வளவோ சிறியது. அணுவில் எதனைச் சூரியன் எனலாம் ? எதனைப் பூமி எனலாம்? அணுவிலும் பல்வேறு அளவுள்ள மின்துணுக்குகள் இருக்கின்றன அல்லவா? அங்குள்ள நேர் இயல் மின்னியைச் சூரியன் என்று சொல்லலாம். அதில் 1840-ல் ஒரு பங்கிற்குச் சமமான எதிர் மின்னியைப் பூமிக்கு ஒப்பிடலாம். கதிரவனைப் பூமி சுற்றிச்சுற்றி வருகிறது. அது போலவே. நேர் இயல் மின்னியை எதிர் மின்னியும் சுற்றி வருகின்றது. இதில் நேர் மின்னூட்டம் பெற்றுள்ள நேர் இயல் மின்னியால் எதிர் மின்னூட்டம் பெற்ற எதிர் மின்னி கவரப்படுவதில்லை; முன்னதில் பின்னது ஓடிப் பாய்வதில்லை. இப்படி ஒன்றினை மற்றோன்று கட்டித் தழுவி ஒன்றாகததற்குக் காரணம் என்ன? கதிரவன் புவியை கவர்ச்சி விசை என்ற ஆற்றலால் இழுக்கிறான். ஆனால், பூமி சூரியனால் கவரப்படுவதில்லை. இதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் நேர் இயல் மின்னியால் எதிர் மின்னி கவரப் பெறாததற்கும். பூமி சூரியனை இடைவிடாது சுற்றிக்கொண்டிருப்பதால் அந்தச் சுழற்சியின் பயனாக ஒருவித ஆற்றல் சூரியனுக்கு வெளிப்புறமாக வீசப்பெறுகின்றது. நாம் ஒரு கயிற்றின் ஒரு முனையில் சாவி யொன்றினைக் கட்டி விரலில் கயிற்றின் மற்றொரு முனையை அமைத்துச் சுழற்றும்பொழுது சாவி விரலை இழுப்பது போன்ற ஒரு வித ஆற்றலை உணர்கிறோமன்றோ? இவ்வாறு சுழற்சியால் உண்டாகும் ஆற்றலைப் புறமுக ஆற்றல்” என்று வழங்குவர். இதனை மையம் விட்டோடும் விசை என்று வழங்குவதும் உண்டு. இந்த ஆற்றல்தான் சாவியை வெளியில் தள்ளுகிறது; சாவி வெளியில் சென்றுவிடாதபடி கயிறு இழுத்து நிற்கிறது. அதுபோலவே, பூமி சுழலும்பொழுது அது புறத்தே எறியப் பெறுகின்றது. கதிரவன் அது வெளியில் சென்றுவிடாதபடி


கவர்ச்சி விசை - force of gravitation
புறமுக ஆற்றல் - centifugal force