பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. அணுவின் அற்புத ஆற்றல்



பேராற்றல் படைத்த மேகநாதன் இலக்குவனுடன் உடற்றிய போரில் இறந்துபடுகிறான். இச்செய்தி இலங்கை நகருக்கு எட்டுகிறது : மண்டோதரியும் இதனை அறிகின்றாள். ஒரு மலையின் மீது ஒரு மயில் வீழ்ந்தாலென்ன மைந்தன் உடலின்மீது வீழ்ந்து புலம்புகிறாள். அவனுடைய அளவற்ற புயவலியையும் வில்லாற்றலையும் எண்ணி எண்ணிப் பலவாறு புலம்புகிறாள்.

முக்கணான் முதலி னோரை

உலகொரு மூன்றி னோடும்
புக்கபோர் எல்லாம் வென்று
நின்றஎன் புதல்வன் போலாம்
மக்களில் ஒருவன் கொல்ல
மாள்பவன்? வான மேரு
உக்கிட அணுஒன்று ஓடி

உதைத்தது போலும் அம்மா ! [1]

என்பது கம்பனின் வாக்கு. “என் மகன் மேகநாதன் சாதாரணமானவன் அல்லன்; மூன்று உலகங்களிலும் நடைபெற்ற எல்லாப் போர்களிலும் மூன்று கண்களையுடைய சிவபெருமானையும் வென்று வாகை சூடியவன் அன்றோ? அத்தகையவன் இன்று கேவலம் ஒரு மனிதனால் கொல்லப் பட்டுவிட்டான். இச்செயல் வானுற ஓங்கி நிமிர்ந்து நிற்கும் மேரு மலையை அணு ஒன்று ஓடி உதைத்தது போலல்லவா இருக்கிறது?” என்று வியப்பு அடைந்து கணக்கு போட்டுப் புலம்புகிறாள். உருவத்தினைக் கண்டு இலக்குவனை எள்ளி விட்டாள்; உருவத்தினைக் கொண்டே தன் மகன் மேகநாத-


  1. கம்ப. இராவணன் சோகப்-52