பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

படுக்க இடமில்லா மக்கள் எவ்வளவோபேர். ஒண்டியிருந்து கஞ்சி காய்ச்சி வாயிலே ஊற்றிக் கொள்ள ஓலைக்குடிசை கூட இல்லாத ஏழைகள் எத்தனையோ ஆயிரம்! மரத்தடிகளிலும், சுவர் ஓரங்களிலும் அடுப்பு மூட்டும் 'அன்றாடங்காய்ச்சி' களுக்கு அந்தரங்க அறைகள் இல்லை. அதனால் சாலையோர இருளிலே ஒதுங்கி அணைந்துகிடக்கும் ஆண் பெண்கள் நாகரிக நகரிலே அன்றாடக் காட்சிகள்!

வசதியான வீடுகள் இல்லாமல் கிடைத்தது. போதும் என்று நாலு சுவர்களுக்கிடையே ஒடுங்கி அல்லுறும் ஏழைக் குமாஸ்தாக்கள் உழைப்பாளிக் குடும்பங்கள் எத்தனை எத்தனை. 'ஒண்டுக்குடித்தனம்' என்று புகுந்து நரகவேதனை அனுபவிக்கும் பிறவிகள் கணக்கிலர்.

இன்னும், இடிந்து விழும் வீடுகளைச் செப்பனிட வகையில்லாமல் அவை முழுதும் வீழ்ந்து 'கட்டமண்ணாய்' 'குட்டிச்சுவராய்' மாறுவதை சகித்துப் பெருமூச்சு எறிவோர்; மழையின் ஒழுக்கிலே நீச்சலடிக்க நேர்கிறவர்கள் - இப்படி, வாழ்வதற்கு வசதியற்ற, சுகமாய் இருக்கவும். படுக்கவும், கவலையற்றுத் தங்கவும் வீடுகளற்ற 'இல்லாதவர்கள்’ எவ்வளவு பேர் என்பதற்குக் கணக்கே இல்லை.

நாகரிகமும் அறிவும் உழைப்பும் மின்சார விளக்குகளைச் சிருஷ்டித்துவிட்டன. அவசரமாக இயங்குவதற்கும் வசதியாகச் செல்வதற்கும் ஊர்திகள் பலப்பலவிதமாகப் படைத்துவிட்டன. சோம்பிச் சாய புரள, படுக்க, உடலை அஷ்ட கோணல்களாக்கி சோம்பல் 'ஆசனப்பயிற்சி' பண்ண, பல