பக்கம்:அன்பு மாலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

51


பணியாதார் ஆனாலும் பணியச்செய் கின்றான்;
பாம்படக்கும் மந்திரம்போல் நன்மொழியைப் பேசி
அணியார்தம் பாலிருக்கும் அவலத்தைத் தீர்ப்பான்;
அகங்கார முறுவார்க்கே அடக்கமுறச் செய்வான்;
திணிவாரும் நெஞ்சகத்தான்; காமமெனும் பகையைச்
செத்தொழியச் செய்கின்றான்; எந்நாளும் போற்றி
மணிவாரும் சிரிப்பினிலே உள்ளத்தைக் கொள்வான்;
வளர்கின்ற ராமசுரத் குமாரென்னும் யோகி.

125

அணியார் - சமீபத்தில் வருகிறவர்கள், அவலத்தை- துன்பத்தை, திணி - திண்மை. மணி வாரும் - முத்தைப் போன்ற.


வேதங்கள் அறைகின்ற பொருளையார் அறிவார்?
மேலாகும் சிதானந்த வாழ்வையார் அறிவார்?
போதங்கொள் ஞானியர்தம் பாலேநாம் சென்று
புக்கிருந்தால் உபதேசம் செய்வார்கள் என்பார்;
யாதெங்கே இருக்குமென யார்அறிவார்? அருணை
எழில் நகரில் வந்தக்கால் ராமசுரத் குமாரை
நீதமுடன் கண்டக்கால் நெஞ்சவலம் ஓயும்;
நித்தலுமே சாந்தியுள்ளே நிலைபெறுதல் ஆமே.

126

நீதம் - நீதி.

பல கேள்வி கேட்பதற்கா வந்துமுன்னே அமர்வார்;
பாங்குடனே அவன்ஏதோ சொல்வான்;அப் போது
கலகமுறும் நெஞ்சகத்தில் சாந்தியினைக் காண்பார்;
கழறுகின்ற பொருள்எல்லாம் விடையாகக் காண்பார்:
சிலகலைகள் பலகலைகள் எல்லாமே சேர்ந்து
திருவுருவாய் இருக்கின்ற ஐயனெனச் சொல்வார்:
மலருறுநற் கூந்தலார் காமத்தை ஒழித்த
மாஞானி ராமசுரத் குமாரென்னும் ஐயன்.

127

கழறுகின்ற- சொல்கின்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/57&oldid=1303451" இலிருந்து மீள்விக்கப்பட்டது