பக்கம்:அடி மனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லிபிடோ

39

என்று அவர் சொன்னார். நாடோடிக் கதைகளும், புராணக் கட்டுக்கதைகளும் இந்த மனித இன நனவிலி உளத்தின் தோற்றமே என்பது அவர் கருத்து. இவ்வாறு அவர் பிராய்டுடன் மாறுபட்டு ‘பகு முறை உளவியல்’ (Analytic Psychology) என்ற மற்றொரு உளவியற் கிளையைத் தோற்றுவித்தார்.

இவ்வாறு பலர் பிராய்டுடன் மாறுபட்டாலும் இவர்களுக்குள் அடிப்படையான ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நனவிலி உளம் என்று மனத்தில் ஒரு பகுதி யுண்டென்பதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை. பிராய்டு கண்டு வெளியிட்ட இந்தக் கருத்து உளவியலில் இன்று முக்கியமான இடம் பெற்றுவிட்டது. பாலுந்தல் என்னும் சக்தியானது வாழ்க்கையின் போக்கை நிறுவுவதில் பெரியதோர் பங்கு கொள்ளுகின்றது என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்; அதுவே தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்பதை மறுத்தாலும் அதை அறவே ஒதுக்கிவிட யாரும் முற்படவில்லை. இன்றும் இது உளவியலில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.

பிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளவியலில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு இன்று வெவ்வேறு துறைகளில் பெரிதும் பேசப்படுகிறது. இலக்கியம், கலைகள், சமூகம் முதலான துறைகளிலும் அது நுழைந்திருப்பதைக் காணலாம். நனவிலி மனக்கோளாறுகளை அடிப்படையாகக் கொண்டே புதியவகையான இலக்கியமும் கலையும் வளரத் தொடங்கியுள்ளன. குழந்தை வளர்ப்பு, மனநோய் மருத்துவம் முதலிய துறைகளில் இதன் முக்கியத்தை யாரும் இன்று மறுப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/44&oldid=1005303" இலிருந்து மீள்விக்கப்பட்டது