பக்கம்:அடி மனம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அடிமனம்

முன்பே கூறினேன். எது ஒழுங்கானது, எது ஒழுங்கற்றது என்று அது தீர்மானிக்கிறது. மனிதனுடைய செயல்களை மட்டுமல்லாமல் அவனுடைய எண்ணங்கள், ஆசைகள், மனோபாவங்கள் முதலியவற்றையும் சரியா தவறா என்று சீர்தூக்கிப் பார்க்கிறது. அகத்திற்கு இரண்டு பக்கத்திலும் தாக்குதல் நேரும். “இத்தின் தூண்டுதலுக்கும், அதீத அகத்தின் குற்றச்சாட்டுக்கும் இடையிலே அகம் தன்னைக் காத்துக்கொள்ள முயல்கிறது” என்று பிராய்டு அகமும் இத்தும் என்னும் தமது நூலில் கூறுகிறார்.

அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுவதைப் பற்றி பிராய்டு கூறும் விளக்கந்தான் மிகுந்த பரபரப்பையும் ஆட்சேபங்களையும் உண்டாக்கியது. குழந்தையின் வாழ்வு தொடங்கும்போது குழந்தை தனது இன்பத்தையே நாடும் மனப்பாங்குடையதாக இருக்கிறது. ஆண் குழந்தை தாயிடம் மிகுந்த அன்பும், பெண் குழந்தை தந்தையிடம் மிகுந்த அன்பும் கொள்ளுகின்றன. இந்த அன்பு பாலியல்பு கொண்டது என்பது பிராய்டின் கருத்து. ஆண் குழந்தை தாயிடம் அன்பு செலுத்தும்போது அதற்குப் போட்டியாக இருக்கும் தந்தையிடம் பகைமை உணர்ச்சி கொள்ளுகிறது. தந்தையின் ஸ்தானத்தை அது கைப்பற்ற முயல்கிறது. தந்தையைப்போல நடக்கவும் விரும்புகிறது. இவையெல்லாம் கைகூடாமற் போவதால் தந்தையிடம் வெறுப்புக் கொண்டு அவனை ஒழித்துவிடவும் முயல்கிறதாம். இம்மாதிரியான மனக் கோளாறை பிராய்டு ஈடிப்பஸ் மனக்கோட்டம் (Oedipus Complex) என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.

ஈடிப்பஸ் என்பது ஒருவனுடைய பெயர். அவனைப் பற்றிய சுவையான கதை கிரேக்க நாட்டுப் புராணங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/53&oldid=1005325" இலிருந்து மீள்விக்கப்பட்டது