பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அதிகமான் நெடுமான் அஞ்சி



“நன்றாகச் சொன்னீர்கள் ! யார் தந்தை ? யார் குழந்தை? நீங்கள் ஆண்டிலே முதிர்ந்தவர்கள் ; நான் மிக இளையவன்; இன்னாரிடம் இன்னபடி பேச வேண்டும் என்பதை அறியாதவன். அப்படி இருந்தும் என்னோடு நீங்கள் பேசி அறிவுரை பகர்கிறீர்கள். உண்மையாக நீங்கள் எனக்குத் தமக்கைபோன்றவர்கள். உங்களுடைய பெருமையைத் தமிழுலகம் நன்றாக அறியும். உங்கள் அன்புக்கு ஆளாகும் பேறு எனக்குக் கிடைத்ததே என்று எண்ணிஎண்ணி இன்பம் அடைந்து கெண்டிருக்கிறேன். நான் உங்களுக்குத் தம்பி போன்றவன். தம்பி என்றே எண்ணி என்னிடம் உரிமையோடு பழகவேண்டும்.”

அவனுடைய பணிவும் உள்ளன்பும் ஔவையாரைக் கவர்ந்தன. ஔவையாரோடு பழகப் பழக அதிகமானுக்கும் செந்தமிழின்பத்தின் கூறுபாடுகள் புலனாயின. புலவர்களிடம் மதிப்பு உண்டாயிற்று. எத்தனை வீரம் உடையவனாக இருந்தாலும், கொடையை உடையவனாக இருந்தாலும் புலவருடைய அன்பைப் பெற்றால்தான் உலகம் மதிக்கும் என்ற உண்மையை உணர்ந்தான் ; ஔவையாரைத் தெய்வம்போலக் கொண்டாடினான். புலவர்களை நன்கு மதிக்கவேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஊன்றிப் பதிவதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று ஒரு சமயம் நிகழ்ந்தது.

ஔவையார் விடை பெற்றுச் சென்றபிறகு ஒரு நாள் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அவனைத் தேடி வந்தார். அவர் வந்த சமயத்தில் அதிகமான் ஏதோ இன்றியமையாத வேலையில் ஈடுபட்டிருந்தான். முன்பெல்லாம் அத்தகைய செவ்வியில் யாரும் அவனை