பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமும் ஈகையும்

15

யுடைய வீரரும் இருக்கின்றனரா?” என்று கேட்டார் ஔவையார். [1] இவ்வாறு பல பாடல்களை அவர் பாடப் பாடக் கேட்டு மகிழ்ந்தான் அதிகமான்.

“உங்களுடைய பாடல்கள் என்னைப் புகழ்பவை என்ற எண்ணத்தோடு பார்த்தால் எனக்கு நாணமே எழுகிறது. ஆனால் அதை மறந்து சொற்பொருட் சுவையை நோக்கும்போது அந்தப் பாடல்களில் ஆழ்ந்து இன்புறுகிறேன். எத்தனை அருமையான பாடல்கள் !” என்று அவன் பாராட்டினான்.

“பாட்டிலே சிறப்பு இருக்கிறதோ, இல்லையோ, உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்தப் பாடல்களை நீ சுவைப்பதற்குக் காரணம் உனக்கு என்னைப்போன்ற புலவர்களிடத்தில் உள்ள பெரிய அன்புதான்.”

“என்ன, அப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஆம்; நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சின்னஞ்சிறு குழந்தைகள் மழலைச் சொல் பேசுகின்றன. அந்தப் பேச்சிலே ஏதாவது பண் ஒலிக்குமா? இல்லை. இன்ன காலத்துக்கு இன்ன பண்ணைப் பாடினால் இனிமையாக இருக்கும் என்ற வரையறை உண்டு. அப்படிப் பொழுதறிந்து வருகிற இசையா அது? அந்தச் சொற்களுக்குப் பொருள் உண்டா ? ஒன்றும் இல்லை. ஆயினும் தந்தைமார்களுக்குத் தம் குழந்தைகளின் மழலைச் சொற்கள் இன்பத்தைத் தருகின்றன; அருள் சுரக்கும்படி செய்கின்றன. என்னுடைய வாய்ச் சொற்களும் அத்தகையனவே. பகைவர்களுடைய காவலையுடைய மதில்களையெல்லாம் அழித்து வென்ற பெருவீரனாகிய நீ என்னிடம் அருளுடையவனாக இருப்பதனால்தான் அவை உனக்கு இனிக்கின்றன!” என்று ஔவையார் ஒரு பாட்டிலே சொன்னார்.[2]