பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அதிகமான் நெடுமான் அஞ்சி

ஆத்தி மாலையையும் புலிக் கொடியையும் உடையவன். பாண்டியன் வேப்ப மாலையையும் மீன் கொடியையும் உடையவன். எல்லோரும் அணிகிற மாலைகளை அணிந்து கொண்டால் தனியாக அடையாளம் தெரியாது. ஆகையால் நாட்டில் உள்ள மக்கள் வழக்கமாக அழகுக்கும் இன்பத்துக்கும் அணிந்து கொள்ளும் மலர்மாலைகளை அவர்கள் தங்கள் அடையாள மாலையாக வைத்துக்கொள்ளவில்லை. பிறர் அணியாத மாலைகளாகத் தேர்ந்து தங்களுக்கு உரியனவாக்கிக் கொண்டார்கள். பனை மாலையையோ ஆத்தி மாலையையோ வேப்பமாலையையோ யாரும் மணத்துக்கென்றோ அழகுக்கென்றோ அணிகிறதில்லை. அவை தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு உரியனவாகப் புகழ் பெற்றவை. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலில் அவற்றின் பெருமையை அதன் ஆசிரியர் கூறியிருக்கிறார்.[1]

தமிழ் நாட்டின் வடக்கே உள்ள பகுதியைச் சோழ மன்னர்களும், தெற்கே உள்ள பகுதியைப் பாண்டிய அரசர்களும், மேற்கே மலைநாடு என்று வழங்கும் பகுதியைச் சேர வேந்தர்களும் ஆண்டு வந்தார்கள். மலை நாட்டில் சேரர் பரம்பரை இன்றும் இருந்து வருகிறது. இப்போது சேரநாட்டில் மலையாள மொழி வழங்கினாலும் அக்காலத்தில் தமிழே வழங்கியது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே அந்த நாடு இருந்தது.

சேர நாட்டின் தலைநகரம் வஞ்சி. இப்போது திரு வஞ்சைக் களம் என்று வழங்கும் ஊரும் கொடுங் கோளுர் என்ற ஊரும் சுற்று வட்டாரங்களும் சேர்ந்த பெரிய நகரமாக விளங்கியது வஞ்சி. சேர அரசர் களின் அரசிருக்கை நகரமாகிய அங்கே அயல்நாட்டு வாணிகர்களும் வந்து மலைநாட்டு விளைபொருள்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் சரக்குகளை ஏற்றிச்


  1. தொல்காப்பியம். புறத்திணையியல், 5.