பக்கம்:அடி மனம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிமனம் வகுத்த வாய்க்கால்

43

நிலைக்களம். இங்குதான் இயல்பூக்கங்களும், இச்சைகளும் கூத்தடிக்கின்றன. இங்கே இன்பம் என்ற தத்துவமே ஆட்சி புரிகின்றது. இதற்கு நியாய அநியாயம் தெரியாது. இதற்குள்ளேதான் அடக்கப்பட்ட இச்சைகள் வந்து சேர்கின்றன. ஆனால் வாழ்க்கை என்பது வெறும் இன்பம் நாடும் செயல்களாகவே இருக்க முடியாது என்று விரைவில் குழந்தை தெரிந்து கொள்ளத் தொடங்குகிறது. தாய் தந்தையரின் நடத்தையும், சூழ்நிலை அநுபவங்களும் இந்த உணர்வு பிறப்பதற்கு உதவியாக நிற்கின்றன. இவ்வாறு உணர்வு பிறக்கப் பிறக்கக் குழந்தை தனது இன்பத்தையே நாடுவதைச் சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து சமூக ஒழுங்குக்கு உட்படுவதற்குத் தயாராகிறது. அதன் காரணமாக இத் என்னும் மனப் பகுதியில் தனது இச்சைகளையே நாடும் பகுதி ஒன்றும், சமூக ஒழுங்குகளின் வலிமையால் தோன்றும் ஒரு பகுதியுமாக இரண்டு பிரிவுகள் தோன்றுகின்றன. இந்தப் புதிய பகுதியே அகம் (Ego) என்பது. ஆனால் இது இத் என்பதிலிருந்து முற்றிலும் தனிப் பட்டிருப்பதில்லை. இதன் அடிப்பகுதி இத்துடன் கலந்திருக்கிறது. இதன் ஒரு பகுதி நனவு நிலையோடும் மற்றப்பகுதி நனவிலி நிலையோடும் தொடர்புடையது என்றும் கூறலாம். இதிலிருந்துதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் செல்கின்றன. இச்சையானது தூய்மையடைந்து சமூகத்திற்கு ஏற்றதான உந்தலாக மாறுவதும் இங்கேதான். இவ்வாறு இழிந்த இச்சைகள் தூய்மையடைவதை உயர்மடை மாற்றம் என்று கூறுவார்கள். இயல்பான உந்தல்கள் அதாவது இயல்பூக்கங்கள் இத்திலிருந்து முக்கியமாக வேலை செய்வதுபோல புலக்காட்சி (Perception) அல்லது புலன் உணர்வு அகத்திலிருந்து முக்கியமான வேலை செய்கிறது. இது நன்னெறியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/48&oldid=1005307" இலிருந்து மீள்விக்கப்பட்டது