பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொண்ணு ஓடிவந்து பார்த்திடப் போகுது; ஒடிப்போய் முகத்தைக் கழுவிக்கிட்டு வந்திடு.” என்று உஷார்ப்படுத்தினார்; சவரன் மார்க் வேட்டியின் ஒரு தலைப்பைப் பிரித்துத் தம் முகத்தை வேகம் வேகமாகத் துடைத்துக் கொள்ளலானார்.

ரஞ்சனியின் கண்கள் பளிச்சென்று இருந்தன; நிர்மலமாகவும் இருந்தன. “நந்தினி” என்று குரல் கொடுத்தாள்.

மாடிப் படிகளை எண்ணிக் கணக்கெடுத்தவளாக, ஆடி அசைந்து ‘அம்மானை’ பாடிக்கொண்டே இறங்கி வந்து கொண்டிருந்தாள் குமாரி நந்தினி, ஷிஃபான் ஸில்க் பாவாடை, தாவணியில் அவள் அழகு ஓங்கியிருந்தது. சந்திரப்பிறைச் சாந்துப் பொட்டில் ஒச்சம் சொன்னால் பாவம். இப்போதெல்லாம் நெற்றிக்கு இட்டுக்கொள்ளப் பழகிவிட்டாள். அம்மாவின் தயவு தேவை இல்லை. பெற்றவளின் அழைப்பு காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. உதடுகளுக்குள்ளே புன்சிரிப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது! வெளிப்புறத்திலே டால்கம் பவுடரின் இனிய மணம் வீசும், படிகளைத் தாண்டி வந்த அயர்வில் வேர்வை மின்னுகிறது; சற்றுமுன் மிதந்து வந்த இசை வெள்ளத்தில் சாமர்த்தியமாக மிதந்து வந்திருக்கக் கூடாதோ இந்தப் பெண்?

ரஞ்சனியை முந்திக்கொண்டு, “வா, மகளே”, என்று வரவேற்றதில் ரஞ்சித்துக்குத் திருப்தி ஏற்படவே செய்தது.

‘உம்’ மென்று முகத்தை வைத்துக்கொண்டு தந்தையை மட்டும் பார்த்த நந்தினி, “நாடக பாணியிலே வசனம் பேசக்கூடத்தான் உங்களுக்குத் தெரியுமே?- என்னை வரவேற்கையிலே, ‘வா, மகளே, வா’ அப்படின்னு அழைச்சால் என்னாங்க, அப்பா?” என்று கேட்டாள்.

ஆ-3

37