பக்கம்:ஆண் சிங்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

ஆகா, வருகிறது. அதை நான் பார்க்க வேண்டும்’ என்று அவன் ஓடினான், வேகமாக முன்னோக்கி...

தடால்!... ஒரு அதிர்ச்சி...

அவனை அலைகள் அள்ளி எடுத்துத் தூக்கி விசித் தரையில் அடித்தது போல் இருந்தது. அவன் தலையில் குபுகுபுவென்று பெருக்கெடுத்தது. நெற்றியில் ஓடி கண்களை நனைத்தது, கன்னங்களில் வழிந்து, உதடுகளைத் தொட்டது... ‘அலைகள்... சூடாக இருக்குதே’ என்ற நினைப்பு இருந்தது அவனுக்கு. அப்புறம் பிரக்ஞையே இல்லை.

கைலாசம் மாடி அறையில் படுத்திருந்ததையும், மொட்டை மாடியில் ஒடினால் முடிவில் கீழே, கீழே, கீழே விழுந்து, தரையில் மோதி மடிய வேண்டியது தான் என்பதையும் நினைக்கவேயில்லை. நினைத்திருக்கவே முடியாதே அவனால். அவனுடைய விசித்திர மனமல்ல வா அவனை முன்னே முன்னே இழுத்துச் சென்றது. அதிகாலையில், மண்டை பிளந்து ரத்தத்தில் தோய்ந்து கிடந்த கைலாசத்தின் உடலைப் பார்த்தவர்கள் ஐயோ பாவம்! வாழ்வில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று முடிவு கட்டினர்கள்.

‘பைத்தியம்! எப்படியோ விழுந்து செத்திருக்கு!’ என்று முனங்கினார்கள் அவன் நண்பர்கள்.

அமைதியிழந்து அலைமோதிய கைலாசத்தின் மனம்...?

ஆமாம்; அற்புத நினைவுகளை - கனவுகளை ஆக்கி அழித்து மகிழ்கிற மனம் மரணத்தின் பின் என்ன வாகிறது? யாருக்குத் தெரியும்!

*

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/49&oldid=1071153" இலிருந்து மீள்விக்கப்பட்டது