பக்கம்:ஆண் சிங்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


தயக்கத்தின் மீது, அவர் எல்லாவற்றையும் அவனிடம் கூறினார். அவனுடைய அபிப்பிராயத்தை விசாரித்தார்.

‘இது ஏவல்தான் எசமான். அதிலே சந்தேகமே வேண்டாம் என்று அறிவித்தான் மாணிக்கம். ஏவல் என்கிற மாயத்தைப் பற்றியும் அவன் சொன்னான். கண்ணுக்குப் புலனாகாத சக்தி எதுவோ விட்டெறியக் கூடிய கற்களைப் பற்றியும், திடீர் திடீர் என்று தீப்பற்றி எரிவதுபோல் தோன்றுவது பற்றியும், ஒருவர் பார்வை யில் மட்டும் கோரமான –கொடுமையான–அசிங்க மான விஷயங்கள் பலவும் தென்படக்கூடிய விதம் பற்றியும், இன்னும் பல மர்மங்கள் பற்றியும் அவன் எடுத்துச் சொன்னன். ‘அவருக்கு இப்படித் தான் நேர்ந்தது’ ‘இங்கே எனக்குத் தெரிஞ்ச ஒருவருக்கு இது மாதிரிதான்...’ என்று ஆரம்பித்து, கதை கதையாகச் சொன்னான் அவன். அவற்றில் அநேகம் நம்பக் கூடியனவாகவும், சில நம்ப முடியாதவையாகவும் தொனித்தன.

‘இப்படியெல்லாம் நடக்குமா, மாணிக்கம்? என்று சந்தேகத்தோடு கேட்டார் பண்ணையார்.

‘நடக்குமாயின்னு மெதுவாக் கேக்கிறீங்களே! நடக்குது எசமான், நடந்துகொண்டே இருக்குது. இந்த உலகத்திலே என்னென்ன அநியாயமெல்லாமோ, அதிசயமெல்லாமோ நடக்குது. எவ்வளவோ சங்கதிகளே நம்மாலே புரிஞ்சுகொள்ள முடியலே’ என்றான் மாணிக்கம். உங்களுக்கு சந்தேகமிருந்தால் மாடசாமியிடம் கேட்டுப் பாருங்கள். நாளைக்கு நானே அவனைக் கூட்டிவாறேன்’ என்றும் கூறினன்.

மறுநாள் மாடசாமி வந்து சேர்ந்தான். அவ்வூர் அம்மன் கோயில் பூசாரி அவன் ‘விபூதி மந்திரித்துப் போடுதல்', ‘திருவிளக்கு மை வைத்து நடந்தது–நடக்கப் போவது எல்லாம் அறிந்து சொல்லுதல் போன்ற வித்தைகளையும் அவன் ஒரு சிறிது கற்றிருந்தான். அதனால் அவனுக்கு நல்ல செல்வாக்கும், திருப்திகரமான வரும்படியும் கிடைத்தன.

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/70&oldid=1072835" இலிருந்து மீள்விக்கப்பட்டது