பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

குமரியின் மூக்குத்தி

 "“நல்லதம்மா, நாளைக்குக் காலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன்”' என்று சொல்லி அவள் போய்விட்டாள். மறுநாள் ஒர் ஒற்றைவடம் சங்கிலி, ஒரு ஜோடி வளை, அந்த ஜடை பில்லை, ஒரு மோதிரம், எல்லாம் வாங்கிக் கொண்டு போனாள். அதற்கு மறுநாளே பத்திரமாக எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டாள்.

"“என்னடி சமாசாரம்”? மாப்பிள்ளை எப்படி இருக்கிறான்? அவனுக்குப் பெண் பிடித்திருக்கிறதா? கல்யாணம் எப்போது எங்கே நடக்கிறது?’ என்று கேட்டேன்.

'பிள்ளை தங்கமானவர். என்ன அமரிக்கையாகப் பேசுகிறார் நிறம் கொஞ்சம் மாநிறந்தான். ஆனால் மூக்கும் முழியுமாக இருக்கிறார். அநேகமாகக் கல்யாணம் தீர்மானம் ஆனபடிதான். அதைப்பற்றி இனிமேல்தான் இவர் எழுதித் தெரிந்துகொள்ளவேணும். வந்தவர்கள் நேற்றே ஊருக்குப் போய்விட்டார்கள்.”

"மீனாட்சிக்கு அவனைப் பிடித்திருக்கிறதா?”

'அதெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை. அவளுக்கு என்று தனியே ஒன்று உண்டா, அம்மா? எங்களுக்குத் தெரியாததை அவள் என்ன காணப் போகிறாள்? நாங்கள் நல்லதைத்தானே செய்வோம்? -

"என்னடி சொக்கு, பத்தாம் பசலிப் பேச்சைப் பேசுகிறாய்? இந்தக் காலத்தில் பெண்ணும் பிள்ளையும் ஒருவரோடு ஒருவர் பேசித் தெரிந்துகொண்டு கல்யாணம் செய்வதல்லவா நாகரிகம்?" -

'“அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம், அம்மா. அந்த நாகரிகம் இல்லாமல் நாங்கள் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நீங்கள் உங்கள் வீட்டு ஐயாவோடு முன்னாலே பேசித்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டீர்களோ?” துப்பாக்கியை என் பக்கமே திருப்பிவிட்டாள்.

“'அது பழைய காலம்'” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.