பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

7



கங்கையாற்றைக்கடக்க உதவியவர். கயவாகுவின் காலமும் யக்ளுழநீயின் காலமும் ஒன்றுபடுதலால் இவ்விருவரும் செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரம் குறித்தது யக்ஞரு சதகர்ணியையே (அவன் ஆணைபெற்ற உயர்அலுவலாளரையே) என்பதும் நன்குபுலனாகும். இக்கருத்தையே அறிஞர் பலர் உறுதிப்படுத்துகின்றனர்.[1]

கயவாகுவின் காலம் - கி.பி. 171-193
யக்ஸ்ரீயின் காலம் கி.பி. 166-196

எனவே, கி.பி. 166-193க்கு உட்பட்ட காலத்தேதான் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டிருத்தல் வேண்டும். இக்காலம் முற்கூறிய படையெடுப்புக்கு உகந்த மூன்றாம் காலத்தோடு (கி.பி.163-300) ஒத்துவருதலும் காண்க.

கரிகாலன் காலம்

வடநாட்டுப் படையெடுப்புக்குரிய மூன்று காலங்களில் ஈற்றுக்காலத்தைச் செங்குட்டுவதற்கு உரிமை ஆக்கினமையின், பிற இரண்டு காலங்களில் ஒன்றே கரிகாலனுடையதாகும். கரிகாலன் இலங்கைத் தீவை வென்று ஆயிரக்கணக்கான அடிமைகளைக் கொணர்ந்தான் என்பது கவனித்தற்குரியது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் “(1) கி.மு. 170 கி.மு.100 வரை இலங்கையைத்தமிழரசர் ஆண்டனர்; (2) கி.மு. 44-கி.மு.17க்கு இடைப்பட்ட காலத்தில் 15 ஆண்டுகள் தமிழர் இலங்கையை ஆண்டனர்; (3) கி.பி. 660-1065க்கு உட்பட்ட இடைக்காலத்தில் தமிழர் இலங்கைமீது படைஎடுத்தனர்.” என்று கூறுகின்றது. இவற்றுள் முதல் இரண்டு காலங்களில் ஒன்று கரிகாலன் தொடர்பு பெற்றதாகல் வேண்டும். இவ்விரண்டும் வடநாட்டுப்படையெடுப்புக்கு ஏற்ற காலங்களோடு பொருந்துகின்றனவா என்பதைக் காண்போம்.


  1. K.G. Sesha Iyer in the “Christian College Magazine’, Sep. Oct. 1917. Dr. S.K. Aiyankar’s “Manimekalai in its Historical Setting’ pp. 105,106
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/27&oldid=516150" இலிருந்து மீள்விக்கப்பட்டது