பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பல்லவர் வரலாறு



கல்கத்தாப் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளராகவுள்ள தினேஷ் சந்திர சர்க்கார் ‘சாதவாகனர்க்குப் பின் வந்த அரசர்’ என்னும் அரிய நூல் ஒன்றில் பல்லவரைப் பற்றி இயன்ற அளவு ஆய்ந்துள்ளார்.[1] டாக்டர் மீனாட்சி அம்மையார் பல இடங்கட்கும் நேரே சென்று ஆராய்ந்து, ‘பல்லவர் கால ஆட்சியும் வாழ்க்கையும்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை 1938இல் வெளியிட்டுளார். இவ்வம்மையார் பட்டுள்ள பாடுகூறுந்தரத்ததன்று. இவரது நூல் பல்லவர் வரலாற்று நூல்களில் சிறப்பிடம் பெறத்தக்கது.

இவற்றுடன் ஆராய்ச்சி நின்றுவிடவில்லை. ஆராய்ச்சி முடிவுற்றது. எந்த நேரத்திலும் எந்தப் பழைய இடத்தும் புதிய பொருள் கிடைத்தல் கூடும்; புதிய பட்டயமோ, கல்வெட்டோ, வேறு புதை பொருளோ அகப்படல் கூடும். இந்த முறையில் ஆராய்ச்சியாளர் கண்ணும் கருத்துமாக இருந்து, கிடைக்கும் புதியவற்றைத் தம் ஆண்டறிக்கைகளில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ஆராய்ந்து இயன்றவரை ஒருவாறு பல்லவர் வரலாறு கூறலே நமது நோக்கமாகும்.


3. பல்லவர் யாவர்?

பல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்திருந்து - ‘அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்?’ என்பன போன்ற கேள்விகட்கு ஏற்ற விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக்கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.

பலதிறப்பட்ட கூற்றுகள்:- இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்பதிப்பில், ‘பல்லவர் என்பவர் பஹ்லவர்


  1. D. Sircar’s “Successors of the “Satavahanas’ (1939)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/44&oldid=583572" இலிருந்து மீள்விக்கப்பட்டது