பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பல்லவர் வரலாறு



(காலேரு தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே சாதவாகனர் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும்.[1] இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி. 200 வரை இருந்தது என்னலாம்.

மணிமேகலை என்னும் காவியத்திலிருந்து, பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்டதென்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும் சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறியிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட சோழ அரசியல் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும், வடவர் படையெடுத்தபொழுது, தலைநகரை இழந்த வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம்; அல்லது உறையூரிலிருந்து படைகள் அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு இருந்த தொண்டை மண்டலம், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணி மேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர். கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய உணரலாம்.


2. பல்லவரைப் பற்றிய சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

சங்க நூல்களில் பல்லவர் என்பரைப் பற்றிய குறிப்பே காணல் இயலாது. ஆனால், சங்க நூல்களின் காலமாகிய கி.பி. இரண்டாம்


  1. Dr. S.K. Aiyangar’s “Manimekali-in Historical Setting,’ pp.49-50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/34&oldid=583551" இலிருந்து மீள்விக்கப்பட்டது