பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னால் வந்தது என்னால்!

9-9-1958 அன்று எனக்கு மன்னார்குடியில் திருமணம். முதல் நாள் இரவு 10 மணிக்கு மன்னார் குடிக்கு வரும் கடைசி ரயிலில் அண்ணா வந்து இறங்கி விட்டார். அவர் வருவது எங்களில் யாருக்கும் தெரியாது. வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு முன்கூட்டி வருவாரென எதிர்பார்க்காததால், ரயிலடிக்கு யாருமே செல்லவில்லை. அதே வண்டியில் வந்து சேர்ந்த சேலம் சித்தையன், ஈரோடு சண்முக வேலாயுதம், ஈ. வெ. கி. சம்பத், டி. கே. சீனிவாசன் ஆகியோர் கூட்டமாக நடந்தே வந்து 2 பர்லாங் தொலைவிலுள்ள மன்னை நாராயணசாமி மாமாவின் ஓந்திரியர் சத்திரத்துக்குப் போய்விட்டார்கள். அங்குதான் அவர் குடியிருக்கிறார்.

செய்தி கிடைத்து, சைக்கிளில் ஒடிப்போய்ப் பார்த்தேன். “காலையில் நாங்களே வந்து விடுகிறோம். நீ போ!” என்றார் அண்ணா. திருமணம் என் மாமனார் வீட்டில், என் நிபந்தனைப்படி புரோகிதரில்லாமல். ஆனால் தாலி உண்டு. காலையில் திருமண நிகழ்ச்சி முடிவுற்றபோதும் அண்ணா:இங்கே வந்து சேரவில்லை!

தாமதமாகவே வந்தார். பிறகு என்ன செய்ய முடியும். இதையே திருமணப் பாராட்டுக் கூட்டமாக மாற்றி நடத்திவிடலாம் என்றார் தவமணி இராசன். எதிர் வீட்டில் அமைக்குமாறு சொன்னேன். என் மாமனாரைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால், அவரிடம் மைக்செட் ஏற்பாடு செய்யச் சொல்லப் பயந்து கொண்டு, சும்மா இருந்துவிட்ட செய்தி, முந்தின இரவுதான் என் கவனத்துக்கு வந்தது. திருவாரூரிலிருக்கும் நண்பர்