பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை
     கதையாலும் கற்பனைத் திறத்தாலும் கருத்து வளத்தாலும் ஒப்பற்ற இலக்கியங்களாய் ஒங்கி நிற்கும் இணையற்ற இரு இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமுமாகும். இவை தோன்றிக் காலங்கள் பல நூறு கடந்துவிட்ட போதிலும், இவற்றில் அமைந்துள்ள பாத்திரங்கள் அறிவுக்கு விருந்தாய், ஆன்மிகப் பெட்டகமாய், நம்மை வழி நடத்திச் செல்லும் வழிகாட்டியாய்

விளங்குகின்றன.

     மேற்குறித்த இணையற்ற இரு இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தில் சிறந்து விளங்கும் ஒரு பாத்திரம், "உய்த்துள காலமெல்லாம் புகழால் ஓங்கி நிற்கும்" அநுமன் ஆவார். அவர் அடக்கம், ஒழுக்கம், அறிவு, பணிவு, வீரம், விவேகம் முதலிய அருங்குணங்களின் ஒர் உருவாய் நின்று, கதைத் திருப்பங்களுக்குக் காரணராய் விளங்குகிறார்.
     "இசை சுமந்து எழுந்த தோளுடைய" அநுமனின் சிறப்பையெல்லாம், பூத்தோறும் சென்று தேன் சேகரிக்கும் வண்டு போல், தம் நுனித்தறியும் புலமையாலும், செறிந்த ஞானத்தாலும் எட்டுத் தலைப்புகளில் அண்ணல் அநுமன் என்னும் இந்த அரிய நூலைப் படைத்தளித்துள்ளார். 'அருங்கலைக்கோன்" ந. சுப்பு ரெட்டியார் அவர்கள்.
     இலக்கிய நோக்ககோடு கற்பார்க்கு இனிய கரும்பாய், பக்திப் பரவசத்தோடு பயில்வார்க்கு அருட்பிரசாதமாய் விளங்கும் இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் மிகப்பெருமிதம் கொள்கிறோம்.
     எந்நோக்கில் படித்தாலும் நன்மையே நல்கும் இந்நூலைத் தமிழ் மக்கள் பெருமையோடு வரவேற்றுப் போற்ற வேண்டுகிறோம்.
                       - பழனியப்பா பிரதர்ஸ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/5&oldid=1472395" இலிருந்து மீள்விக்கப்பட்டது