பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சிந்தனைச் செம்மல்

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு” (467)

நன்றாக எண்ணிய பிறகே ஒரு செயலைத் துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணுவோம் என்று கருதுவது குற்றமாகும். சிந்திக்கும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே இறைவனால் வழங்கப்பெற்ற ஒர் அற்புத ஆற்றல். அதனை வளர்த்துக்கொண்டு அதனைச் செயற்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்; பொறுப்பும் ஆகும். கவிநாயகனான அதுமனிடம் இவ்வாற்றல் அற்புதமாகச் செயற்பட்டுத் திகழ்வதை இராமகாதையில் தெளிவாகக் காணலாம். அதனை ஈண்டுக் காட்ட முயல்வேன்.

சிந்தனை - 1 : எந்த ஒரு செயலையும் தந்திரமாக முடிக்கவேண்டுமெனில், பார்ப்பன வடிவத்தை மேற்கொண்டு செயலில் இறங்குவதைக் காணலாம். மாவலியிடம் மூவடி மண் பெறுவதற்குத் திருமால் ஒரு வாமன மாணியாச் சென்றதையும், கன்னனுடைய தருமத்தையெல்லாம் பெறுவதற்குக் கண்ணன் பார்ப்பனக் கோலத்தில் சென்றதையும் இதிகாசங்களில் காண்கின்றோம். இங்ங்னமே இராமலக்குமணரைக் கண்ட சுக்கிரீவன் முதலிய வானரர்கள் அவரை வாலியைச் சேர்ந்தவர் என அஞ்சியோடி மலைக்குகைகளில் புகுந்து ஒளிந்துகொள்ள முயல, அநுமன் அவர்களைத் தேற்றியபின், தான் ஒரு பார்ப்பனப் பிரம்மச்சாரி கோலங்கொண்டு அவர்களை ஆராய முற்படுகின்றான். அவர்கள் இருக்குமிடத்தை அணுகி, மறைவாக நின்று, ஆராயத் தொடங்குகின்றான்.

1. திருக்குறள், தெரிந்து செயல்வகை - 7 2. கிட்கிந்தை - அதுமப் 6 - 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/47&oldid=1356735" இலிருந்து மீள்விக்கப்பட்டது