பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 அண்ணல் அநுமன்

நோக்கிக்கொண்டே அசோக வனத்தில் நுழைந்தேன். அங்குத்தான் அப்பெருமாட்டியைக் கண்ணிர்க் கடலில் கண்டேன்.” (68)

(ஓ) பல பேய்கள் போன்ற அரக்கிமார் அச்சுறுத்தி பிராட்டி தப்பிப் போகாதவாறு காக்க, தனிப்பட்டவளாய் அவர்களிடையே நெருக்குண்டு, அவலச்சுவையே பெண்ணுருக்கொண்டு சிறைப்பட்டது போன்று உள்ளாள், பிராட்டி ” (69)

(ஒள) "பெண்ணின் பெருங்குணங்கள் இயல்பாகவே அமையப்பெற்ற பிராட்டி உன்பால் வைத்துள்ள காதலைக் கண்களினால் தெவிட்டிவிடாமல் பார்த்தற்கு நீ அவதரித்ததனால், நீயே புருடோத்தமன் என்னும் பேற்றை அடைந்தவனாகின்றாய்.” (70)

(க) "சுவாமியே, இலங்கையில் நாள்தோறும் பெரு மூச்சுடனும் குற்றுயிருடனும் ஊசல்போல் அலைந்து திரிபவர்களாகிய தெய்வமகளிரும் தேவர்களும் முன்னே பிராட்டியை அறியாதிருப்பினும் அவளது நிலையை இப்போது கண்டறிவார்கள்." (71)

(ங்) "அடியேன் பிராட்டியை வணங்குதற்குத் தகுதியான காலத்தை எதிர்பார்த்து இருந்தபொழுது, இலங்கை வேந்தன் அங்கு எய்தித் தன்னைக் காதலிக்கும்படி வேண்டி நின்றனன்; பிராட்டி கடுஞ்சொற்களைக் கூற, அவன் சீறி அப் பெருமாட்டியைக் கொல்ல மேற்கொண்டுவிட்டான் (72)

(ச) "பெருமானே, பிராட்டியின் கற்பு நிலையும், நின் கருணையும், தூய அறமும் என்ற இவையாவும் தொடர்ந்து விடாமல் பாதுகாத்தன; அப்பொழுது அரக்கன் காவல் புரிந்த அரக்கிமாரைப் பிராட்டிக்கு அறிவு மாறும்படி வருத்துமாறு கூறிச்சென்றனன் (73)

(ஞ) "அச்சமயத்தில்தான் பிராட்டி உயிர் துறப்பதாக உன்னி, கொடி ஒன்றனை எடுத்து, ஒரு மரத்தின் கிளையில் உறுதியாகக் கட்டி, தன் மணிக்கழுத்தில் சேர்த்துச் சுருக்கிட்டுக்கொள்ளும் சமயத்தில் அச்செயலைத் தடைசெய்து, அப்பெருமாட்டியின் திருவடிகளை வணங்கி நின்று நின் திருநாமத்தைச் சொன்ன பொழுதில் (74)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/129&oldid=1361299" இலிருந்து மீள்விக்கப்பட்டது