பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

83


சில நூறு அடிகள் நீளமுள்ள ‘மதிற்சுவர்கள்’ தயாரித்தோம். ஆனால் யார் பனைமரங்கள் கொண்டு வந்து நடுவது? எங்களால் ஆகுமா?

பனைமரங்கள் பந்தலுக்கு வந்து சேரவில்லை! அண்ணா கடுமையாக அன்பிலிடம் கோபங் கொண்டார். முதல் நாள்தான் வந்து ஜேர்ந்தன. அந்த மரங்களையும் பந்தலைச் சுற்றி நட்டால் அல்லவா அவற்றின் மீது படுதாக்களை இழுத்துக் கட்டி ஆணி அடிக்க முடியும்? தனது ஆசை தோல்வியுற்றதோ என எண்ணி அண்ணா ஆயாசங் கொண்டார். கடைசியில் என்ன செய்ய இயன்றது தெரியுமா? ஒவியக் கலைக் கூடத்துக்குச் செல்லும் வழியில் அந்தப் படுதாக்களைச் சும்மா கட்டச் செய்தோம்! வீணாகிப் போன இந்த வேலையை, விடாமல் நான் செய்ததன் பயன்? வலது கையில் பொறுக்க வொண்ணா வலி ஏற்பட்டுப், பிறகு, சென்னை சென்று கலைஞர் வீட்டில் தங்கி நீண்ட நாள் சிகிச்சை செய்ய நேரிட்டதுதான்! இன்னும் அந்தப் பாதிப்பு நீடிக்கிறது.

மாநாட்டில் டிக்கட் விற்கும் வேலையை நான் துவங்கி யதும் திருச்சியில்தான். அங்கு மட்டும் எங்களுக்கு கே. கோவிந்தசாமி தலைவர். அடுத்த அனைத்து மாநாடு கட்கும், டிக்கட் கவுண்ட்டர் தலைவர் நானே!

எங்கள் கவுண்ட்டருக்கு ஒருமுறை அண்ணா வருகை தந்தது எனக்குப் பெருமையாயிருந்தது. இங்கிருந்துதான் மாநாட்டின் கடைசி நாள், ஒட்டுச் சீட்டுகள் பார்வையாளர்களுக்குத் தந்தோம். அதாவது தி.மு.க. தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்பதற்கு ஒரு பெட்டி-நிற்க வேண்டாம் என்பதற்கு வேறொரு பெட்டி-மாநாட்டுக்கு வருகை புரிந்தோர், ஜனநாயக முறையில் சீட்டுகளைப் பெட்டியில் போட்டுத், தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். மிகப் பெரும்பான்மையான மக்கள், தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினர்!