பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அறிவியல் திருவள்ளுவம்

ஏழு பருவங்களாவன :

பெண் : பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.

ஆண் : சிறுவன், மீனி, மறலோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்-இவ்வாறு 'அவிநயம்' என்னும் பழைய இலக்கணநூல் குறிக்கிறது.

3. கல்வி ஏமம்

                    “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398)

இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும்.

கல்வியை "எண்என்ப, ஏனை எழுத்து என்ப" (392) என்று இரண்டுள் அடக்கினார். சிறுவன் தன் பருவத்தில்கற்கும் எண், எழுத்து எனும் இவையிரண்டும் அவன் வாழ் நாள் வரை கல்விக்கும், செயலுக்கும், வாழ்விற்கும் அடித்தளமாக நின்று அவன் அறிவையும், அறிவார்ந்த வாழ்வையும், அவற்றால் அவனையும் பாதுகாக்கின்றன. முதற் பருவத்தில் சிறுவன் 'அ, ஆ, இ...... ' என எழுத்துக்களையும், '1,2,3......0' என எண்களையும் கற்கிறான். இவன் அவ்வாறே அவனது ஏழு பருவங்களுக்கும் துணை.