பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்!

ன்று மாநிலங்களவை உறுப்பினராயிருக்கும் ஆலடி அருணா அவர்கள் எழுதிய “இந்தி ஏகாதிபத்தியம்” என்ற நூலும், வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் அ. இராமசாமி அவர்கள் எழுதிய “இரத்தத்தில் 50 நாட்கள்” என்ற நூலும், 1965-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் கலிங்கத்துப் பரணிகளாகும். உலக வரலாற்றிலேயே, மாணவர்கள் தாமே சினந்தெழுந்து, பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை அனைத்து ஊர்களிலும் கிளர்ச்சிகள் செய்ததும், தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் ரயில்களே ஓடாமல் செய்ததும், பள்ளிச் சிறார்களும் பங்கேற்று நின்றதும் கிடைத்தற்கரிய செய்தியாகும். அதேபோல, எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு முதல்வர், தம்மிடமுள்ள போலீஸ் படை போதாமல், ராணுவத்தையும் வரவழைத்து, மாணாக்கர்களைக் காக்கை குருவிகளைப் போலச் சுட்டுக் கொன்றதாகவும் தகவலில்லை. நமது பெரியவர் பக்தவத்சலம் என்ற மகானுபாவர் அந்த அருஞ் செயல் புரிந்து, தான் பதவியில் அமர்வதற்குக் காரணமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அற்றுப் போக உறுதுணையாய் விளங்கியவர்-இன்னும் வாழ்கிறார்-வாழிய!

1965 ஜனவரி 26-முதல் இந்தி அரியணை ஏறும் என அன்றையப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தனது எதிர்ப்பினை அமைதியாகத் தெரிவிக்கும் என்றார் அண்ணா. குடிஅரசு நாளில்