பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

அண்ணா-சில நினைவுகள்


சாக்கடைத் தண்ணீரில் பேனாவைத் தோய்த்து எழுதியது போல், எப்படியெல்லாம் கடிதங்கள் வரைந்தார் கழகத் தலைவர்களுக்கு! அவரை அமைச்சரவையில் சேர்க்க வில்லையாம். அதற்காக இழிமொழிகள் வசவுகள் சாபங்கள் தாபங்கள்!

இவரைவிட நீண்ட நாட்களாகக் கட்சியிலிருந்து வந்த இன்னும் இருவர், மேலும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்களிருவருக்கும் தாமே நேரில் வந்து அண்ணாவிடம் கேட்க அச்சம். தத்தம் துணைவியார், மக்கள்-இவர்களை அனுப்பினார்கள். பட்டிக்காட்டுப் பெண்களைப் போல் அவர்கள் அழுது அரற்றிப் புலம்பி மாரடித்து மண்ணை வாரி இறைத்து அண்ணாவின் வீட்டில் அட்டகாசம் செய்தனர். எல்லாரும் பார்த்துக் கொண்டுதாணிருக்கிறோம்; அண்ணாவும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!

இதே போன்றுதான், தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் ஒருவர், “அய்யய்யோ! நான் ஜெயிக்கலியே! நான் என்ன செய்வேன்! என்னை மந்திரியாக்க மாட்டீங்களா? அய்யோ! நீங்க உள்ளே போயி உக்காரும்போது நான் வெளியிலேயே நிற்கிறதா?” என்று சுயநினைவு அற்றவராய்த் தள்ளாடி மயங்கி ஓவென்று கதறிக் கதறிப் பல நாட்கள் அழுதார்!

அண்ணாவிடம் கேட்டேன் தனியாயிருக்கும் போது “அண்ணா! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னிங்களே - இதையெல்லாம் தாங்கிக்கதான் வேணுமா? பாக்கிறபோதே எங்களுக்கெல்லாம் ஆத்திரமும் கோவமும் வருதே-அவுங்களை நாமே தண்டிக்கலா மாண்ணு! இப்படி நம்ம அருமைத் தோழர்களே செய்றாங்களே? பதவின்னாபத்தும் பறந்து போயிடுமா? தொலைவிலிருக்கிற வெற்றி பெற்ற தோழர்களோ, ஒட்டுப் போட்ட