பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

163


மரத்துக்கு அடியில் மறைந்துகிடக்கும் வேர்போல RMS ஊழியம். இலை காய் கனிதான் தபால்துறை. எல்லாம் சேர்ந்தால்தானே மரம்?

அண்ணா அவர்கள் எங்கள் தொண்டினை உணர்ந்திருந்த காரணத்தால், நான் அழைத்தபோதெல்லாம் வந்து சிறப்பித்தார்கள். 4.1.66 சென்னை மவுண்ட்ரோடு தபால் நிலையத்துக்குப் பின்புறம் அதாவது போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மேடை அமைத் திருந்தோம். (அப்போது யாருக்குத் தெரியும் இது அண்ணாசாலை அஞ்சல் நிலையம் என மாறும் என்பது!) அன்றைய கூட்டம் என் தலைமையில். நண்பர் முஸ்லிம்லீக் தலைவரான ஏ. கே. ஏ. அப்துஸ்சமது, தேசியவாதி T. செங்கல்வராயன், அஞ்சல்துறை இயக்குநர் டி. ஆர். சங்கரன், ஏ. பி. துளசிராம் ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்துவிட்டனர். கூட்டம் துவங்க வேண்டிய நேரம். அண்ணாவை மட்டும் காணோம்!

“நான் நேரே கூட்டத்துக்கு வந்துவிடுகிறேன். நீ கவலைப்படாமல் இரு!” என்று உறுதி சொல்லியிருந்தார் அண்ணா என்னிடம். என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனாலும் காஞ்சியினின்று வர ஒருமணி அல்லது ஒன்றரை மணிநேரம் போதுமே: இன்னும் காணோமே! பதைப்பு-படபடப்பு-பதற்றம்-நடுக்கம்-பயம்-திகில்-அடுத்து மயக்கந்தான் பாக்கி!

P.M.G. அலுவலகத்தில் Returned letter பிரிவினில் உள்ள நம் இயக்க நண்பர் G. லட்சுமணன் துடிதுடிப்போடு மேலே போய் Phone-ல் விசாரிக்கிறார். அண்ணா காஞ்சியை விட்டுப் புறப்பட்டு விட்டாராம். ஆனால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே! ஆ! இதோ வந்து விட்டார்!... சரியாக ஒரு மணிநேரம் தாமதமாக வந்து இறங்கி, மன்னிப்புக் கோரும் தோரணையில் “வண்டி ரிப்பேராகி விட்டதய்யா வழியில்” என்கிறார் அண்ணா