பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அறிவியல் திருவள்ளுவம்

கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

ஆனால், அவரே,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[1] என்று கட்டுரையில் 'கவி'யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் 'கவிஞர்' என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் "கவியரசி" என்று போற்றினார்.

புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை "செய்யுள்' எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் 'பா, பாட்டு' எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

'செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் 'கவிதை' எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள்


  1. சுப்பிரமணியபாரதி, சி.
    - பாரதி கட்டுரை கலைகள் .