பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுபாணாற்றுப் படை

97



இரும்பேரொக்கல் என்கிறார்; சுற்றத்தாருக்குப் பஞ்சமே இல்லை; உணவுக்குத்தான் பஞ்சம்.

நிலங்களின் தன்மையையும் வனப்பையும் விரித்துரைப்பதில் கவிஞர் நத்தத்தனார் மிக வல்லவராகக் காணப்படுகின்றார். நெய்தல் நிலப் பட்டினத்தைப் பற்றிக் கூறும்போது அங்கு, '“தாழை அன்னம் பூக்கின்றது; செருந்தி தமனியம் போலிருக்கின்றது; கழி முள்ளி ஒளிவீசும் நீல மணிபோலப் பூக்கின்றது: புன்னை முத்துப்போல அரும்புகின்றது” என்று அழகாக அந்நிலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார், வேலூரிலே, “அவரை பவழம் போன்ற பூக்களைக் கொண்டிருக்கிறது. மயிலின் கழுத்தைப்போலக் காயா மலர்கின்றது; முசுண்டை கொட்டம்போல விரிகின்றது; காந்தள் கைவிரல்போல இதழ் அவிழ்கின்றது; கொல்லையில் இந்திர கோபப் பூச்சிகள் ஊர்கின்றன” என்கிறார்.

மருத நிலக் காட்சி ஒன்றை அவர் எவ்வாறு தீட்டுகிறார் என்று பார்ப்போம். தாமரையைப் பற்றிக் கூறிவிட்டால் மருத நிலத்தின் செழிப்பும் செவ்வியும் பளிச்சென்று விளங்கிவிடுமல்லவா நத்தத்தனார் இதை நன்கு அறிந்திருக்கிறார். “நீர் நிலையில் நெடிது நேரம் காத்திருந்து, நீரின் மேல் மட்டத்திற்கு வந்த கயல் மீனை முழுகி எடுத்த, பொன்னிறம் போலும் வாயையுடைய, நீலமணிச் சிரல் பாய்வதாலே கிழிபட்ட இலைகளையுடைய தாமரை” என்று அவர் எழுதுகிறார்.

நிலை அருங் குட்டம் நோக்கி நெடிதுஇருந்து

புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்