பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றாலம் கண்டேனா?

"குற்றாலத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதிக் கொடு. பத்திரிக்கையில் வெளியிடவேணும்” என்று அண்ணா என்னிடம் கேட்டார்கள். “குற்றாலத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அப்படியே இருந்தாலும், இப்பொழுது அதை நமது இதழில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயத் தேவை என்ன?” என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கச் சந்தர்ப்பம் அனுகூலமாயில்லை. “சரியண்ணா! எழுதித் தருகிறேன்” எனக் கூறிவிட்டு, ஊருக்குத் திரும்பினேன்.

அண்ணா கொடுத்த இந்தத் தலைப்பு என்னை மிகவும் சோதனைக்குள்ளாக்கி விட்டது! காரணம், குற்றாலத்தைப் பற்றிய அனுபவம் எனக்குக் கிடையாது! ஒரு முறை கலைஞ ரோடு சென்று,ஓர் இரவு அங்கே தங்க நேர்ந்தது. அப்போது கூட விடுதியின் குளியலறையில், வெந்நீரில் குளித்தேன்; அருவிக்குச் செல்லவில்லை.

அண்ணா சொன்னதனால், குற்றாலத்துக்கு நேரில் சென்று, பார்த்து வந்து எழுதலாம். ஆனால், இது ஒரு கவிஞனுடைய கற்பனைத் திறனுக்கு இழுக்கு அல்லவா? நீள யோசித்தேன்!

மாயூரத்தில் என்னுடைய அலுவலக நண்பன் நாக ராசனிடம் விசாரித்தால் என்ன? அவர் குற்றாலம் அருகில் உள்ள தென்காசி ஆர். எம்.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் அலுவலில் இருந்த போதுதான், அகிலன் ‘பாவை விளக்கு’ நாவல் எழுதியதாகக் கேள்விப்பட்டிருந்தேன். நாசராசன் சொன்ன செய்திகளின் அடிப்படையில் எழுதத் தொடங்கினேன்.