பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதினொரு மாதம் சுமந்தவர்

சிய ஜோதி அணைந்து விட்டது! காந்தியடிகளின் செல்லப்பிள்ளை, ரோஜாவின் ராஜா, இந்தியாவின் முதல் பிரதமர், பண்டித ஜவாகர்லால் நேரு, 27.5.1964 பிற்பகல் 2.30 மணியளவில் திடுமென மறைந்த செய்தி-ஜன நாயகத்தை நேசிப்பவர் நெஞ்சில் வேல் பாய்ச்சியது! நாடே கதறி அழுதது! இம்மாதிரி நேரங்களில் விரைந்து முன் வந்து, தமது இரங்கலைத் தெரிவிக்கத் தயங்காத அண்ணா-அன்று அவ்வாறு உடனே கருத்தை வெளியிட வில்லை! ஏன்?

இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு நகலைக் கொளுத்திக் கட்டாய இந்திக்கு நம் எதிர்ப்பைத் தெரிவிப் போமென அண்ணா அறிவித்தார். அவருடன் டி. எம். பார்த்தசாரதி, டி. கே. பொன்னுவேலு, தையற்கலை கே. பி. சுந்தரம், வி. வெங்கா ஆகிய நால்வரும் ஒரு குழுவாக இணைந்து, சென்னைக் கடற்கரையில் எரிப்புப் போராட்டம் தொடங்குவதற்கெனக் காஞ்சியினின்று காரில் வரும்போதே, வழிமறித்துக் கைது செய்யப் பட்டனர். 1963 டிசம்பர் 10 ஆம் நாள் இக்குழுவினர்க்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, ஐவரும் சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

நேருபிரான் இறந்ததால், இவர்களை விடுதலை செய்துவிடக் கூடிய பெருந்தன்மை காங்கிரஸ் அரசுக்கு வருமா? அவ்வளவு ஏன்? காந்தியார் மறைந்தபோது 1948-ல் பெரியாரையும் அண்ணாவையும் அழைத்து வானொலியில் இரங்கலுரை ஆற்றச் சொன்னவ்ர்கள், நேருவின் மறைவுக்கு 1964-ல் அவ்வாறு அழைக்கவில்லை.