பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

செய்வதற்குச் சிரமம் எடுத்துக் கொண்டாலும் திடீரென்று அந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுவதில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு நம்பிக்கையுள்ள ஒருவன் அதைச் செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இந்த மனப்பான்மையை உபயோகித்துக் கொண்டுதான் சில புதிய அரசியலமைப்புகள் உலகத்திலேயே ஏற்படலாயின. சர்வாதிகார நாடுகளிலே சுயேச்சையாக எண்ணமிடு வதையே ஆதரிப்பதில்லை. குழந்தைகளும் ஒரு குறுகிய வழியிலேயே எண்ணமிடுமாறு அவர்களுடைய மனப்போக்கைக் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறுவிதமாக எண்ணிப்பார்க்கும் ஆற்றல் குறைந்து விடுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுவதே சரியானது என்றும் படுகிறது.

இம்மாதிரி மனப்பான்மை ஆட்சி புரிபவர்களுக்கு அனுகூலமென்றாலும், நாட்டிற்கோ உலகத்திற்கோ நன்மை பயக்காது என்பதை நாம் இன்று நிதரிசனமாகக் கண்டு கொண்டோம். ஆதலினாலே சிந்தனா சக்தி தாராளமாக வளரும்படி சிறுவர்களே வளர்த்து, அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தமது எண்ணத்தால் சோதித்துப் பார்க்கும் படியான மனப்பான்மை உடையவர்களாக ஆக்க வேண்டும்.

குழந்தையின் மனப்போக்கு செம்மையாக அமைவதற்குப் பெற்றோர்கள் உதவவேண்டும். குழந்தை சுயேச்சையாக எண்ணமிடுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். சிறுவர்களின் சிந்தனு சக்தியை விகசிக்கச் செய்வதில் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தத் திறமையை வளர்க்கும் அளவிற்குத்தான் முக்கியமாகக் கல்வியின் பயன் இருக்கின்றது. ஆனால் இன்று புத்தகங்களிலுள்ள அறிவையும் எண்ணங்களையும் சிறுவர்களுடைய மனத்தில் புகுத்துவதே கல்வியாகக் கருதப்படுகின்றது. சிறுவனுக்-