பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

படத்தை மீண்டும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவன் கவனம் மல்லிகாவை விட்டு விலகவேயில்லை. கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தனவேயொழிய, அவன் மனம், மல்லிகாவுடன் வாழ்ந்த வாழ்வையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மல்லிகாவின் மார்பகத்தில் மையமிட்டுப் பதிந்து சிரித்த அந்தத் தாலி - அவன் கட்டிய அந்தத் தாலிஅவன் உள்ளத்தை அறுத்தது. விதி அறுத்துக்கொண்டு அவனுடன் கண்ணுமூச்சி ஆடிவிட்டு ஒடிவிட்ட அந்தத் தாலி, அவனது பெட்டியின் அடியிலும், அவனது உள்ளத்தின் அடியிலும், மூலமும் நகலுமாக - நகலும் மூலமுமாக இருந்த உண்மையையும் அவன் மறக்கவில்லை.

கண்களின் வலி தாளவில்லை : விழி வெள்ளத்தைச் சுண்டி விட்டு, மறுபடியும் அப்புகைப்படத்தை நோக்கினான் சிவஞானம். அவனுடைய மாமன் மகள் விஜயா இப்பொழுது அவன் திருஷ்டிக்கு விருந்து வைத்தாள். அவள் தன் கணவன் சபசேனுடன் மிகவும் நெருக்கமாக ஒட்டி உரசிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது எழிலார் மார்பகத்தில் இழைந்து கொண்டிருந்த அந்தத் தாலி வெகு நயமாகச் சிரித்தது: சிரித்துக்கொண்டேயிருந்தது !...