பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

“என்ன, ஊஹூம் ...”

“ஆமா, ஊஹூம்தான் !”

சிவஞானம் கதிகலங்கிப் போய்விட்டான்.

அவனைப் பார்த்ததும் அவளுக்கே பரிதாபமாக இருந்தது. “அத்தான், என்னோட இந்த வயிற்றுக் குமட்டலுக்கு நீங்க பயப்படவேண்டிய தேவையில்லை. சந்தோஷப்படணுமாக்கும் !”

“என்ன பேசுறே நீ?”

“தமிழ் பேசுறேனுங்க, அத்தான் !... தமிழ் பேசுறேன் !”

“தமிழ்ச் சினிமா டயலக் பேசுறே நீ !... எனக்கு ஒண்னும் புரியலையே !... ஒ...மை காட் !... ஒ மைடியர் மல்லிகா !”

“இப்போ ஒண்ணும் புரியாது போனால், இன்னும் பத்து மாசம் கழிச்சு கட்டாயம் உங்களுக்குப் புரிஞ்சிடும் !... எஸ்... உங்களுக்குப் புரமோஷன் கிடைக்கப் போகுது !... நீங்க அப்பா ஆகப் போறீங்க, அத்தான் !” என்று நாணம் கட்டி நின்றாள் அவள்.

“ஆ ... அப்படியா ?” என்று அவளைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு குதித்தான். உண்மையிலேயே அப்படிச் செய்தான். அவள் என்ன அவனைக் காட்டிலும் பதினெட்டு பவுண்ட் குறைவேதான் ! பின் என்னவாம் ?...

சிவஞானம் சிலிர்த்துத் திரும்பினான்.

‘ஆல்பம்’ காற்றில் அலைந்தது.

ஒட்டப்பட்டிருந்த ஒரு படம் காற்றை மீறி நிலைத்தது : பார்த்தான்.

அன்றொருநாள் இதே ‘லாட்ஜில்’, இதே அறையில், அவனும் மல்லிகாவும், அவன் மாமன் மகள் விஜயாவுக்கும் அவளுடைய பிராணநாதன் சபேசனுக்கும் விருந்து வைத்த சம்பவம் அவனுள் தோன்றியது. விருந்து முடிந்ததும், அவர்கள் நால்வரும் படம் எடுத்துக்கொண்டார்கள். தானே இயங்கும் அமைப்பை நிலைப்படுத்தி, அவர்கள் நால்வரையும் ஒருசேரப் படம் எடுக்க வைத்த நுட்பம் சபேசனைச் சார்ந்தது.

அழகு மாளிகைக்கு வந்த தொடக்கத்தில் தொடர்ந்த இந்நினைவினைத் துண்டித்த கட்டத்தையும் ஞாபகம் கொண்டான் சிவஞானம்.