பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கூடு கட்டியிருந்த பறவைக்கூட்டிலே தாய்க்குருவி தன் குஞ்சுக்கு இரை கொடுத்துக்கொண்டிருந்தது. தாயும் குஞ்சும் அவன் பார்வையில் தட்டுமறித்துச் சுற்றின. அவன் பார்வையைத் தாழ்த்தி, கட்டிலை நோக்கினான்.

குழந்தை அயர்ந்த நித்திரை வசப்பட்டிருந்தது. துயரம் முழுவதையும் மறந்துவிட்ட பாவனையில் அதன் கண்கள் பாங்குடன் மூடிக்கிடந்தன. தனக்குப் பாலூட்ட அன்னை இல்லேயே என்ற ஏக்கம், உள்வட்டமாக அந்தப் பிஞ்சு மனத்தில் சுழித்துக்கொண்டிருந்ததோ ?

தாய்க்குருவியும் அதன் குஞ்சும் பாசப்பரிவர்த்தனைக்கு அடையாளமாகக் ‘கிச்சிட்டுக்’ கொண்டேயிருந்தன.

சிவஞானம் வெய்துயிர்ப்பைக் கொட்டினான்.

ஒரு சம்பவத்தை அவன் மனம் அசை போட விழைந்தது.

அமைந்தகரையில் அமைந்திருந்த விமல் அச்சகத்தில் அப்பொழுது அலுவல் பார்த்துக்கொண்டிருந்தான். அச்சகத்தின் பொறுப்புக்களை ஏற்றிருந்த நிர்வாகிக்கு அடுத்தபடியாக அவன் இருந்தான். வரும் ஆர்டர்களைச் செயற்படுத்தும் பணி குறிப்பாக அவனுக்கு அமைந்தது. வழக்கம் போல, அவன் வேலை விட்டு, சிந்தாதிரிப்பேட்டைக்குச் சைக்கிளில் பறந்து வந்துகொண்டிருந்தான். அன்பு மனையாட்டியின் இன்ப நினைவு அவனுடன் சைக்கிளை ‘பெடல்’ செய்திருக்க வேண்டும். மல்லிகாவின் முதற்சந்திப்பே அவனது முதல் அதிர்ஷ்டம் போல அமைந்திட்ட எண்ணக்கனவை நினைத்தான். முதற் காதல் அவன்வரை தோற்றாலும், முதற்சந்திப்பாவது காதலின் வடிவெடுத்து அவனுக்கு வாழ்வை அமைத்துக் கொடுத்த அந்தப் பொன்னான வாய்ப்பை நினைத்தான். மாமன் மகள் விஜயா அவளுக்கே உரிய அன்புடன் பழகினாலும், அவளது பணக்காரச் சுற்றுச்சார்பு அவளை எட்டாக்கொம்பில் தூக்கி வைத்துவிட்டதையும், அதன் விளைவாக அவனது முதற் காதல் வெறும் பொய்க்கனவாகிப் போன துயரத்தையும் எண்ணமிட்டான். தாய் தந்தை இழந்த அவனுக்குத் தன் மாமன்—— விஜயாவின் தந்தை——தன்னுடைய பி. ஏ. படிப்புக்கு வழி வகுத்துக்கொடுத்த ஈகையை அதற்குரிய துல்லிதமான