பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


அப்பா பிரச்னை !

ருமைமிகு தமிழ் நாட்டின் தலைநகர்ப் பட்டணத்திலே ‘ஆனந்த்’ தியேட்டருக்கு ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு: அங்கே படம் பார்ப்பதென்றால், ஞானபண்டிதனுக்கு ஒரு கவர்ச்சி ஊறுவது வழக்கம். மன அமைதியும் கிட்டுவது இயல்பு.

அங்கே ‘தி விசிட்’ என்ற படம் ஒடிக்கொண்டிருந்தது. ‘மாட்னி’க்கு அவன் படம் பார்க்கச் சென்றான்.

“இந்நேரம் பூவழகி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். என் கடிதமும் அவள் பார்வைக்குக் கிடைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தான். அந்த லெட்டர் அசம்பாவிதமாகவோ, எதிர்பாராத வகையிலோ, ஒருவேளை குழலியிடம் கிடைத்தால்?” ஒருகாலும் அதை உடைத்துப் பார்க்கும் பண்பிழந்த செய்கையை மேற்கொள்ள மாட்டாள் என்ற வரைக்கும் அவள் அவனிடம் ஒரு நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மேலும், பூவழகி தன்னைப்பற்றித் தோழியிடம் எதுவும் சொல்ல ஏது எதுவுமில்லை என்பதையும் அவன் யோசித்தான். உரிய நபர் இல்லாவிட்டால், கடிதத்தைப் பையன் கொண்டுவந்து விடுவான் !

ஞானபண்டிதனுக்கு நிம்மதி பறிபோய்விட்டது போன்றே இருந்தது. செங்கோடனும் சோமசேகரர் அவர்களும் தன்வரை மூடுமந்திரப் பொருள்களாகவே அவனுக்குத் தோன்றினர்.

செங்கோடன் யாரோ அந்நியன் !

ஆனால் ஸ்ரீமான் சோமசேகர் ?

பெரியவரைத் தன் தந்தை என்று பாசத்துடன் நினைத்துப் பார்க்கக்கூடக் கடந்த சில மணி நேரங்களாக அவன் மறுகினான்.

அதன் பின் ?...