பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

திருப்புகலூர்க் கல்வெட்டு

நெற்குன்றவாணர் திருப்புகலூரிலும் வாழ்ந்து வந்தவராக அறியப் பெறுகிறார். சோழ நாட்டுத் திருப்புகலூர்த் திருக்கோயிலில் கண்ட முதற் குலோத்துங்க சோழனது 49-ஆவது ஆட்சியாண்டிற்குரிய கல்வெட்டொன்று,

“ஸ்ரீ புகலூர்த் தேவர் மத்தியான்னம் அமுது செய்தருளும் போது...நித்தம் பன்னிரண்டு பிராமணர் உண்பதாக ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பேரூர் நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங் கிழார் அரையன் கருவுணாயகரான களப்பாள ராஜர் செய்வித்த சாலைக்கு ... ... சாலைப் புறமாக இறையிலி செய்து என்றுள்ளது.“[1] இக் கல்வெட்டுப் பகுதியிலிருந்து இவர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து நெற்குன்றம் என்ற ஊரவர் என்றும், அரையன் என்ற சிறப்புப் பெயர் உடையவர் என்றும், கருவுணாயகர் என்பது இவருடைய இயற்பெயரென்றும் அறியப்பெறும். இந் நெற்குன்றங் கிழார் திருப்புகலூர்ச் சிவபெருமானிடத்தில் மிகவும் பக்தி கொண்டிருந்தமையின் அவ்வூரில் ஓர் உணவுச்சாலை அமைத்துச் சாலைப்புறமாக இறையிலி நிலமும் அளித்தார். திருப்புகலூர் இறைவனிடத்தில் இவர்கொண்ட பக்தி இவரியற்றிய திருப்புகலூர் அந்தாதி என்ற நூலாலும் உறுதி யெய்தும்.

செவிவழிச் செய்தி

நெற்குன்ற வாணர் திருப்புகலூர் அந்தாதி பாடியமை பற்றி ஒரு கதை வழங்குகின்றது. அக்கதை வருமாறு :—


  1. சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 64.