பக்கம்:இருட்டு ராஜா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்23

 “இதுதான் நம்மவங்க கிட்டேயே உள்ள குறை, அநியாயங்களை, அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறது கிடையாது. அதுக்கு யாரும் முன் வருவதும் இல்லே. நமக்கென்ன, யாராவது எப்படியாவது கேட்பாங்க என்று தட்டிக் கழிச்சிடுவாங்க. இல்லாட்டி, இருக்கவே இருக்கு. ஆண்டவன் கேட்பான்கிற வேதாந்தம். இன்னைக்கு நான் முத்துமாலை கிட்டே பேச்சுக் கொடுக்கிறேன்” என்று தங்கராசு பொரிந்து கொட்டினான்.

அம்மா பயந்து விட்டாள். பதறினாள். “ஏ ராசு, உனக்கெதுக்கு வீண் வம்பு? இத்தனை நாள் கழிச்சு வந்திருக்கே. பத்துப் பதினைஞ்சு நாள் இருந்திட்டுப் போப் போறே, விருதாச் சனியனை விலை கொடுத்து வாங்குகிற மாதிரி, வலியப் போயி நீ சிக்குவானேன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு பேரு!” என்றாள்.

“இப்படிப் பழமொழிகளுக்கும் தத்துவ உபதேசங்களுக்கும் குறைச்சல் இல்லே!” என்று முனகினான் மகன். பிறகு வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

முன்னிரவில் சீட்டி ஒலி எழுந்ததுமே, “முத்துமாலை கிளம்பி விட்டான்” என்று சொன்ன அம்மா மகனுக்கு எச்சரிக்கை விடுத்தாள். ராசு, அவன் எக்கேடும் கெடு தான். ஊரிலே யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு? நீ வெளியே தலை காட்ட வேண்டாம். அவன் கிட்டே பேச்சுக் கொடுக்கவும் வேண்டாம். சொல்லிட் டேன், சொல்லிட்டேன்”

அவன் சரி, சரி, என்று தலையசைத்தான். எட்டு மணிக்கே படுக்கவும் செய்தான். ஆனால் தூக்கம் எங்கே வந்தது?

அம்மா நன்றாக தூங்கலானாள். லேசு லேசாக குறட்டை கூட வந்தது அவளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/25&oldid=1138964" இலிருந்து மீள்விக்கப்பட்டது