பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி.கலைமணி

45



அதனுடைய இரைச்சலில்; அர்த்தமற்ற மொழிகளின் சஞ்சாரம்; கோடைக் காலத்தில் வைக்கப்பட்ட விருந்தைப் போல; விரைவில் ஜீரணமாகி விடுகிறது.

உண்மையிலேயே நொந்து - வறுமையின் வெடவெடப்பால்; கொடுமையின் குளிரால் - இறுகி; வெளியே வரும் வார்த்தைகள் - காலத்தின் தொண்டை வழியே சென்றாலும் ஜீரணமாக முடியவில்லை.

நொந்து போனவனுடைய சப்தம் - இரக்கமுடையவனுடைய இரைச்சல் - கருணை கொண்டவனுடைய விம்மல் - கதியற்றவனுடைய கூச்சல் -

அழுகையின் தினமான குரல்; மனித சமுதாயத்திற்காகக் கதறி அழுத குரல.

காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை.

காலத்திற்கே அது, கதை கூறும் அசரீரி.

நரகத்தோடு தொடர்பு கொண்டவன் - கோவிலில் படிக்கட்டாக மிதிக்கப்படுகிறான்.

மோட்சத்துக்கு முந்தானை போட்டவள் - என்றைக்கும் வாலிபக் கன்னியாகவே இருக்கிறாள்.

அவளைக் கிழவியாக்கும் சக்தி, காலத்திற்கு இல்லை. அண்ணா மோட்சத்திற்கு முந்தானை போட்ட கன்னி.

அவருடைய வாலிபத்தைக் காலம் காதலிக்கிறது.

கடவுளிடத்தில் தண்டனை பெற்றவன் - உண்மையான மனிதனாக மாறுகிறான்.

அரசாங்கத்திடம் தண்டனை பெற்றவன் - மீண்டும் கைதியாகவே வெளியே வருகிறான்.

அரசாங்கக் கைதியைப் பார்த்து; ஆண்டவன் கைதி - பூரணத்தை நோக்கி'ஓடிவா' என்றழைக்கிறான்.

அரசாங்கக் கைதி; இறுதியில் கல்லறைக் கைதியாகவே மாறுகிறான்.