பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'அண்ணா ஒரு கடல்'- கட்டுரைத் தலைப்பு கடலைப் பற்றிய அரிய பல செய்திகள் இதில் அலை மோதுகின்றன. கடலடியில் கடற்செடிகள் அவை மீன்களுக்கு உணவாகின்றன. அச்செடியின் தண்டைப் பிளந்து பார்த்தால் உள்ளே வெதவெதப்பு எப்படி வந்தது?

அச்செடியின் உடல் பூராவும் இருக்கின்ற 'செல்' என்ற உயிர்ப்புச் சக்தி, சூரிய ஒளியால் சூடான நீரில் இருக்கின்ற வேதவெதப்பை உறிஞ்சிக் கொள்கிறது.

இவ்வளவு விவரங்களைத் தருகின்ற கலைமணி, இறுதியில் "அறிஞர் அண்ணா அவர்கள் நீரால் சூழப்பட்ட கடற் செடியைப் போல, பாதகம் விளைவிக்கின்றவர்களுக்கு மத்தியில் இருக்கின்றார். இந்நாட்டிலுள்ள பல கோடி ஏழை மக்களின் துன்பச் சூட்டை நன்குணர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள், அந்தத் துன்பத்தை மட்டும் தான் உறிஞ்சி வைத்துக் கொண்டிருக்கிறார்.

கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும், தன்னையே மீனுக்குத் தீனியாக மாற்றி கொள்வதற்கும் உருவானதைப் போல அறிஞர் அண்ணா அவர்கள் தன்னைப் பொது மக்களுக்கு அர்ப்பணித்தும், அவர்களது துன்ப வேக்காட்டைத் தான் உறிஞ்சிக் கொண்டும் வாழ்கிறார் என, தான் முன்னர் சொன்ன பொருளோடு அண்ணாவைத் தொடர்புபடுத்திக் காட்டும் நேர்த்தியே நேர்த்தி!

அண்ணாவைத் தென்றலாக்கும் அருமையைக் காணுங்கள். "தென்றலே! தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அறநெறிகளை, ஏற்று, மாலைநேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே ஏன்?"

மயக்கும் மாலைப் பொழுதான அந்தி நேரத்திலே, தமிழக வீதிகளிலே நடைபெறும் பொதுக்கூட்டங்கள் தோறும் நீ உலா வருகிறாயே கூட்டத்தில் குழுமியுள்ள மக்களது உள்ளங்களை யெல்லாம் நீ சிலிர்க்க வைக்கிறாய்! கவருகிறாய், கொள்ளை கொள்ளுகிறாய்! இதற்குக் காரணம் என்ன?