பக்கம்:இருட்டு ராஜா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்93

 அவனுக்கே பட்டது. அர்த்தம் புரிந்து கொள்ளமுடியாத ஒரு கலக்கம் அவனுள் சதா அரிக்கலாயிற்று.

கொடைக்குப் பிறகு திரிபுரசுந்தரியைக் கண்டு பேச நேர்ந்ததும், அவளுடைய வாழ்வின் நிலைமையை அறிந்து கொள்ள நேர்ந்ததும், முத்துமாலையின் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கியிருந்தன. அத்துடன் அம்மன் கோயில் பந்தல் எரிந்து சாம்பலாகிப் போனதும் அப்படிச் செய்தவனைக் கண்டுபிடிக்க இயலாமலிருப்பதும் அவனை வெகுவாகப் பாதித்திருந்தன. “சே, என்ன வாழ்க்கை! என்ன மனுஷங்க” என்று அவன் அடிக்கடி கசப்போடு கூறிக் கொண்டான்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனக் கசப்பை அதிகரிக்கச் செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அவனும் அவனுடைய சகாக்களும் அம்மன் கோயிலில் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும். ஒருவன் ஓடிவந்தான்.

“முத்துமாலை, நீங்கள்ளாம் உடனே புறப்பட்டு பெரிய கோயிலுக்கு வரணும். சீக்கிரம்” என்று அவசரப் படுத்தினான்.

“என்னடே, என்ன விசயம்?”

“ரெண்டு பேரு காரிலே வந்து, கோயிலுக்குள்ள சின்ன வாசல் வழியாக நுழைஞ்சாங்க விளக்கு எதுவும் வச்சுக்கிடலே. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு” என்று வந்தவன் அறிவித்தான்.

மற்ற அனைவரும் விருட்டென்று கிளம்பினார்கள். முத்துமாலை அரிவாளை எடுத்துக்கொண்டான். நண்பர்களிடமும் கத்தி, கைத்தடி, டார்ச் லைட் எல்லாம் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/97&oldid=1139548" இலிருந்து மீள்விக்கப்பட்டது