பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

179



அவன், குகையில் வாழும் பூச்சி!

தொடுவான் ஒளியிலே நனைபவன், உலகத்திலே வாழும் நல்ல மூச்சு!

அண்ணாவின் கருத்துக்கள், பல நேரத்தில் இப்படிச் சிதறி வெளியே தெறிக்கும்போது, பயந்த மனிதனும் உண்டு - பழகிய மனிதனும் உண்டு.

ஆகர்ஷண சக்திக்கு அப்பால், எந்த உலகமும் சுற்றுவதில்லை.

மனிதர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு உலகம்!

அவர்களும் ஈர்ப்பு சக்திகுள்ளேயே சுற்றுகிறார்கள்.

அவர்களுக்குள் சூரியன் உண்டு வெளுத்துப் போன நிலவும் உண்டு.

எண்ணெய் அற்ற அகல் விளக்கைப் போன்ற தாரகைகளும் உண்டு - அலைகின்ற மேகங்களும் அழுவதற்கென்றே உண்டு.

இந்த உலகங்கள் மரணக்குழியில் உருண்டு விடக் கூடாது என்பதற்காக, அகிலாண்டமாக அறிஞர்கள் பிறப்பதுண்டு.

அவர்கள், திசையற்ற இடத்திலே இருந்து பிறந்து, வழியற்ற பாதையிலே நடந்து, விழியற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.

அவர்களின் வேர், மூல விதையின் முனையிலே தங்கியிருக்கிறது.

அந்த விதைக்குள்ளே, கிளை - தழை - பூ - பிஞ்சு - கனி - அத்தனையுமுண்டு.

விதை விதைத்த பிறகுதான், இலை வெளியே வரும்.

விதையைப் பார்த்து, கதை இவ்வளவு தானா - என்று முடிவு கூறுபவன் முட்டாள்.

அண்ணா, விதையாக இருந்து - அவரே விருட்சமாக ஆனவர்.

வானமாக இருந்து - தொடுவானாக வளைந்தவர்.