பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

24

அருள்நெறி முழக்கம்


விடக்கூடாது. அருளியல் கலவாத அறிவியல் அழிவைத்தான் தரமுடியும் என்று முன்னர்க் கூறியது எல்லோர் உள்ளத்திலும் அழியாத இடத்தைப் பெறுதல் வேண்டும்.

அன்பியலும் அருளியலும் இல்லாத காரணத்தால் நாடு காலப்போக்கில் வறண்டு பிற்போக்கான நிலைக்கு வந்து விட்டது. அறத்தின் அடிப்படையில் - அன்பின் அடிப்படையில் - அருளியலின் துணைகொண்டு நாட்டிற்கும் நமக்கும் நல்லன காண முடியும். அணுகுண்டு சகாப்தத்தில் அன்பினாலும் பிரார்த்தனையினாலும் இந்தியா சுதந்திரம் பெற்றதை எல்லோரும் கண்கூடாகக் கண்டோம். பழமை அனைத்தும் பொய் என்று கூறுகின்றவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "அணுகுண்டு உலகிலேயே உலகம் எங்கும் ஒரு கொடிகட்டி அரசு செலுத்திய ஆங்கில ஆட்சியாளரிடம் பிரார்த்தனையின் துணை கொண்டு காந்தியடிகள் சுதந்திரம் பெற்றார்” என்ற செய்தியை அடுத்த நூற்றாண்டில் நம்ப முடியாது என்று சொல்லுவார்கள் என்று கருதுகின்றேன்.

கண்கூடாகக் கண்டு பயன் அடைந்த காந்தியத் தத்துவத்தை இன்று மறந்து வாழ்கின்றோம். அதனை இழந்து கொண்டே வருகின்றோம். இந்த நிலையை மாற்றி அமைத்துக் காந்தியடிகள் கண்ட நாடாக இருக்க வேண்டுமானால் அருளியலும் அறிவியலும் ஒருங்கே தரும் கல்வி நிலையங்கள் எங்கும் எழுப்பப் பெறுதல் வேண்டும். அத்தகு கல்வி நிலையங்கள் என்று எழுப்பப்படுகின்றனவோ அன்றுதான் நாம் அண்ணல் காந்தியடிகள் கண்ட இன்பப் பெருநாட்டைக் காண முற்பட்டவர்களாவோம் - அடிகோலியவர்களாவோம். அந்தநாள் தான் தமிழகத்தின் நன்னாளாகும். ஏன்? பொன்னாள் என்று கூடச் சொல்ல வேண்டும்.

கல்வி நிலையங்களில் சமயப் பாடம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். சமயம் வளர்ந்தால்தான் சமுதாயம் வளம் பெறும் என்ற உறுதிப்பாடு எல்லோர் உள்ளத்திலும் எழும்ப வேண்டும்.