பக்கம்:தேன்பாகு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


அவனுக்கு இருந்தும் வெட்கத்தினால் கேட்காமல், போட்டதைச் சாப்பிட்டு எழுந்தான்.

அந்தத் தேன்பாகை அந்த வீட்டுக்காரர்கள, ரேழிக்கு அருகில் உள்ள ஒர் அறையில் ஒரு பானையில் வைத்துத் தொங்க விட்டிருந்தார்கள் எறும்பு வராமல் இருக்க அப்படிச் செய்திருந்தார்கள். கோபாலன் அதனைக் கவனித்தான். இரவு யாரும் அறியாமல் அதை எடுத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்தான்.

தான்விடியற்காலையில் எழுந்து ஆற்றுக்குச் சென்று நீராடுவது வழக்கமென்றும், அதனால் ரேழித் திண்ணையில் படுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அப்படியே அங்கேபடுத்திருந்தான். உறக்கமே வரவில்லை. தேன் பாகின் நினைவாகவே இருந்தான்.

நள்ளிரவு ஆயிற்று, மெல்ல எழுந்திருந்து அந்த அறையில் புகுந்து மேலே மிக உயரத்தில் தொங்க விடப்பட்டிருந்த தேன்பாகுச் சட்டியைப் பார்த்தான். அங்கே சார்த்தியிருந்த ஒரு கோலை எடுத்து அதனால் அந்தச் சட்டியின் அடியில் குத்தினான். அது பழைய சட்டியாதலால் பொத்துக் கொண்டுத் தேன்பாகு கீழே ஒழுகியது. ஆவென்று வாயைத் திறந்து அதைக் குடித்தான், தேன்பாகு தரதரவென்று விழுந்ததனால் அவன் மேலெல்லாம் அபிஷேகம் பண்ணியது போல் ஆயிற்று. உடம்பெல்லாம் தேன்பாகு; ஒரே பிசுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/8&oldid=1301351" இலிருந்து மீள்விக்கப்பட்டது