பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உடற்கல்வி என்றால் என்ன?


அரும்பி நிற்பதை அரும்பு என்றும் நான் மலரப் போகிறேன் என்று அது பொழுதை எதிர்பார்த்து இருக்கும் நேரத்தை போது என்றும், மலர்ந்து விடுகிற பொழுது அதற்கு மலர் என்றும் மலர்ந்து செழித்து மணந்து நிற்பதை வீ என்றும் விளக்கமாக அறிஞர்கள் கூறுவார்கள்.

கல்வியும் அப்படித்தான் நமக்குக் கைகொடுக்கிறது, முதிர்ந்த, விளைந்த, வாழ்வுக்குப் புகழாகிய மணம் அளிக்கின்ற அறிவுதனை அளிப்பது தான் கல்வி என்று கூறப்படுகிறதுபோலும்.

கல்வியின் நோக்கம்:

நல்ல அறிவாலும், நல்ல ஒழுக்கப் பண்புகளாலும், நல்ல உடல் ஆற்றலும் உள்ளவராக ஒரு மனிதரை உருவாக்கி, அவரை முழு மனிதராக மாற்றிட உதவி, வழிகாட்டி, பண்படுத்தி, பக்குவமாக வளர்ப்பது தான் கல்வியின் நோக்கமாக இருக்கிறது.

முழு மனிதராக வளர்வது என்றால், உடலாலும், உள்ள உணர்வாலும், ஆழ்ந்த அறிவாலும் சிறப்பாக வளர்வது என்று அர்த்தமாகும்.

கல்வியின் நோக்கம், கற்கிறவர்களுக்கு நிறைய அனுபவங்களை அளிப்பதுதான், கற்றுக்கொண்டிருக்கும் பொழுது தொடர்ந்து பல அனுபவங்களைத் தந்து கொண்டே புதிய அனுபவங்களை உணர்ந்து கொள்ள, பழகிக்கொள்ளும் அறிவை வழங்குவது தான் கல்வியின் நோக்கமாகும்.